Periyar : “மன்னிப்பு கேட்ட ஹோட்டல் ஓனர் - பெரியார் செய்த சம்பவம்” என்ன தெரியுமா..?
முரளி கஃபே முதலாளி தன்னை வந்து சந்தித்து மன்னிப்பு கேட்டதைக்கூட விடுதலை நாளிதழில் செய்தியாக வெளியிடக் கூடாது என்றும் கறாராக உத்தரவிட்டார் பெரியார்
கோவை அன்னப்பூர்ணா ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜி.எஸ்.டி. குறித்து அவருக்கே உரித்தான தொனியில் கேள்வி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், அவர் மீண்டும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினார். அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாஜகவின் அழுத்தத்தால், மிரட்டலால்தான் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டார் என திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து வரும் நிலையில், பெரியாரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர் குறித்தும் அதற்கு பெரியார் என்ன எதிர்வினையாற்றினார் என்பது பற்றியும் சுவாரஸ்சிய தகவல் வெளியாகியுள்ளது
மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் பகிர்ந்த சுவாரஸ்சிய நிகழ்வு
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான கோவி.லெனின் என்பவர் தன்னுடைய முகநூலில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,
”அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் பாஜகவுக்கு எதிரானவர் அல்ல. திராவிட இயக்கத்திலோ, கம்யூனிஸ்ட் கட்சியிலோ, காங்கிரசிலோ கூட அவர் இல்லை. வியாபாரத்தை நேர்த்தியாக செய்யக் கூடியவர். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பாஜக பரிவாரங்களுக்கு நண்பராக இருப்பவர். அதனால்தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.
அவர் ஜிஎஸ்டி வேண்டாம் என்று சொல்லவில்லை ஜிஎஸ்டி வரிவிதிப்பு குழப்பம் இல்லாமல் இருந்தால் போதும் என்று மட்டும் தான் கோரிக்கை வைத்தார். அதுவும் மேடையில் இருந்த சட்டமன்ற உறுப்பினரை சாட்சியமாக்கி, நடைமுறை அனுபவத்துடன் விளக்கினார்.
அதிகாரத் திமிர் – கோவி.லெனின் ஆவேசம்
அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல், அதிகாரத் திமிரை ஆணவத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர். இந்த நேரத்தில், வரலாற்று நிகழ்வு ஒன்றை நினைவு படுத்த வேண்டிய தேவை உள்ளது.
பெரியார் நடந்துகொண்ட விதமும் பண்பும்
பிராமணாள் கபே/பிராமணாள் ஹோட்டல் பெயர்ப் பலகைகளை நீக்கச் சொல்லி பெரியார் முன்னெடுத்த போராட்டத்தின் முக்கியக் களமாக இருந்தது திருவல்லிக்கேணி பாரதி சாலை (பைகிராப்ட்ஸ் ரோடு) முரளி கபே.
முரளி பிராமணாள் கபே என்றிருந்ததை 1956 மே மாதம் முதல் 1957 மார்ச் வரை தொடர்ச்சியானப் போராட்டம் நடத்தியும், திராவிடர் கழகத் தொண்டர்கள் தினமும் பத்துப் பத்துப் பேராகக் கைதாகி சிறை சென்றும், ஹோட்டல் மாடியிலிருந்து கொட்டப்பட்ட வெந்நீரால் போராட்டக்காரர்கள் துன்பப்பட்டும், நீண்ட போராட்டத்துக்குப் பின்‘பிராமணாள்’ நீக்கப்பட்டு, முரளி ‘ஐடியல்’ கபே ஆனது.
பெரியாரை சந்தித்து மன்னிப்பு கோரிய ஹோட்டல் முதலாளி
சிந்தாதிரிப்பேட்டையில் பெரியாரை இரவு நேரத்தில் சந்தித்த ஹோட்டல் முதலாளி தன் ஹோட்டல் நிர்வாகத்தின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார். அப்போதெல்லாம் இப்படி முதுகுக்கு பின்னே செல்போன் கேமராவால் வீடியோ எடுக்கும் வசதிகள் கிடையாது. அதிகபட்சம் புகைப்படம் எடுக்கலாம். ஆனாலும் பெரியார் இதற்கு அனுமதிக்கவில்லை.
முரளி கஃபே முதலாளி தன்னை வந்து சந்தித்து மன்னிப்பு கேட்டதைக்கூட விடுதலை நாளிதழில் செய்தியாக வெளியிடக் கூடாது என்றும் கறாராக உத்தரவிட்டார். அவர்தான் பெரியார்.அதனால்தான் பெரியார்” என கோவி. லெனின் குறிப்பிட்டுள்ளார்.