Chennai Rains: ‛மேகம் திடீர் திடீர்ன்னு மறையுது... கணிக்க முடியவில்லை’ -வானிலை ஆய்வு மைய இயக்குநர்
மேகங்கள் மறைந்து மறைந்து வந்ததால் கணிக்க முடியவில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
மேகங்கள் மறைந்து மறைந்து வந்ததால் கணிக்க முடியவில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 47% அதிக மழை பெய்துள்ளது. 2015ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலிலும் 2 நாட்கள் கனமழை பெய்யலாம்.
மேக வெடிப்பு என்றால் ஒரே நேரத்தில் அதிகனமழை பெய்யும். சுழற்சி இருந்தால்தான் தொடர்ந்து மிக கனமழை பெய்யும். சென்னையில் பெய்த அதிகனமழைக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே காரணம். மேக வெடிப்பு அல்ல. கடலில் இருக்கும் என கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பகுதிக்கு திடீரென நகர்ந்ததே அதிகனமழைக்கு காரணம். அதி கனமழையை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.
மழை பெய்வதை துல்லியமாக கணிக்க ரேடார் உள்ளிட்ட புதிய உபகரணங்கள் சென்னையில் தேவையே. புதிய உபகரணங்கள் வாங்க அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் இனி துல்லியமாக கணிக்க வாய்ப்புள்ளது. கணிப்புகளையும் தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழையின் அளவு மாறுபடக்கூடும். மேகங்கள் மறைந்து மறைந்து வந்ததால்தான் மழையை கணிக்க முடியவில்லை. மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றுதான் மழை வரும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் சில நேரங்களில் இதுப்போன்று நடக்கும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “பேய் மழை பெய்திருக்கிறது. திருச்சியில் இருந்ததும், நேரியாக சென்று ஆலோசனை நடத்தினேன். நீரை வெளியேற்றும் பணிகள் இன்று முடிந்துவிடும். மழையை கணிக்க வானிலை அதிகாரிகளே தவறியுள்ளனர். வானிலை அறிக்கை பெறுவதில் இயந்திரங்கள் மாற்ற வேண்டியது மத்திய அரசின் வேலை. மீண்டும் அதை நினைவூட்டுகிறேன். மீண்டும் தேங்கிய இடத்திலேயே மழை நீர் தேங்க காரணம், 10 ஆண்டுகளாக குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அடுத்த மழை வருவதற்குள் அனைத்தையும் சரி செய்து விடுவோம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்