Thirumavalavan: செய்தியாளர் சந்திப்பில் ஆவேசப்பட்டது ஏன்? - பொறுமையாக விளக்கம் அளித்த திருமா...!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Thirumavalavan : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தொல்.திருமாவளவன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம் குறித்து திருமாவளவன் பேசினார். அப்போது, சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிகிறது. இதுவரை யாரும் கைது செய்யவில்லை. திமுகவுக்கு ஆதரவாக விசிக செயல்படுகிறதா என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு திருமாவளவன் கூறியதாவது, "நாள் என்பது ஒரு பிரச்சனை இல்லை. இத்தனை நாள் ஒரு வழக்கில் ஆகும் என்று நம்மால் சொல்ல முடியாது. அப்படி பார்த்தால் ராமஜெயம் கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? எனவே திமுக அரசு தலித் மக்களுக்கு எதிராக இல்லை. வேங்கைவயல் பிரச்னையில் யாரையும் காப்பாற்றும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
நான் திமுகவா?
இதனை அடுத்து, திமுகவுக்கு ஆதரவாக விசிக செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு திருமாவளவன், ”திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறதாலேயே இப்படி நீங்கள் அநாகரீகமாக பேசக்கூடாது. நான் திமுககாரனா? இதெல்லாம் அநாகரீகமான பேச்சு. நான் ஆவேசமாக பேசறேன்னு சொல்றீங்க? இதுக்கு பெயர் ஆவேசமா.. கையை நீட்டி பேச வேண்டாம் என்றால், நான் கையை கட்டிட்டு பேசனுமா?" என்றார் திருமாளவன்.
மேலும், "திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை. தலித்துகள் பிரச்னைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம். நாளைக்குகூட கிருஷ்ணகிரியில் பேராட்டம் நடத்த உள்ளோம். திமுக கூட்டணியில் இருப்பதால் இதுபோன்று அநாகரீகமாக பேசக்கூடாது" என்று திருமாவளவன் பேசினார். இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேச்சுக்கு ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, இதற்கு திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதாவது, ”மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைமை மீதான நம்பகத் தனமையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது.
திருமாவளவன் விளக்கம்
பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல், நேர்மைத் திறத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது. திமுக - விசிக உறவில் விரிசலை ஏற்படுத்திட வேண்டுமென்பதோ; விசிக'வின் தனித்துவத்தைக் கொச்சைப்படுத்துவதோ; விசிக'வின் தலைமையைப் பலவீனப்படுத்த வேண்டுமென்பதோ; விசிக, தலித் மக்களுக்கு எதிராகவுள்ளது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்பதோ; திமுக, தலித்துகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிந்தும் விசிக மற்றும் அதன் தலைமை, திமுகவுக்கு ஆதரவாக அதனைப் பாதுகாக்கவே முயலுகின்றன என்கிற ஒரு பொய்யான கருத்துருவாக்கத்தைச் செய்வதோ; அந்தக் கேள்வியின் அற்பமான உள்ளீடாக இருக்கலாம்.
ஆனால், அந்தக் கேள்வி பாதிக்கப்ட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான்
இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.