தடுப்பூசியில் பழிவாங்கும் மத்திய அரசு: டாக்டர் ரவீந்திரநாத் குற்றச்சாட்டு
தடுப்பூசி வழங்குவதில் கூட மாநிலங்களை பழிவாங்குகிறது மத்திய அரசு என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் மத்திய அரசு மீது கடும் புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ABPநாடு டிஜிட்டலுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்பு பேட்டி:
‛‛கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் கூட, கொரோனா தடுப்பு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் மாநிலங்களுக்கு வழங்குவதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. எல்லாவிதமான அதிகாரத்தையும் மத்திய அரசே வைத்துக்கொண்டு இதில் கூட மாநிலங்கள் சுயமாக செயல்படாமல் தடுக்கிறது. சில மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் தரக் கூட மறுக்கின்றார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், கேரளா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை போதிய அளவு தராமல் பழிவாங்கும் படலத்தை மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கிறது.
நாளை திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தாலும் அவர்களும் இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். எனவே, மாநிலங்களே சுதந்திரமாக கொரோனா தடுப்பூசிகளையும் தடுப்பு மருந்துகளையும் கொள்முதல் செய்துகொள்ள மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், மாநில அரசுகளே தடுப்பூசிகளை உற்பத்தி செய்துகொள்ளவும் வழிவகை செய்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி தட்டுப்பாடுகளை நீக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கோவாக்சின் தயாரிக்க அனுமதி தரவேண்டும்'. என்று கூறினார்.
நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் தற்போது ஆக்சிஜன் தான் அத்யாவசிய தேவையாக மாறியுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கு அனுப்பப்பட வேண்டிய ஆக்சிஜென் சிலிண்டர்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார். அதேபோல கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய அரசிடம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கேட்டதாகவும். இதுவரை மத்திய அரசிடமிருந்து 60 லட்சத்து 84 ஆயிரத்து 360 டோஸ்களை கேரளா அரசு பெற்றுள்ளது என்றும் கூறினார். அதேபோல மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டதில் 56 லட்சத்து 75 ஆயிரத்து 138 டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
Del facing acute shortage of oxygen. In view of sharply increasing cases, Del needs much more than normal supply. Rather than increasing supply, our normal supply has been sharply reduced and Delhi’s quota has been diverted to other states.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 18, 2021
OXYGEN HAS BECOME AN EMERGENCY IN DEL
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை முன்பை விட அதிதீவிரமாக பரவி வருகின்றது. தடுப்பூசி கண்டறியப்பட்டு வழங்கப்பட்டு வந்தாலும் கூட தொடர்ந்து கொரோனாவின் வேகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் அதிகபடச்சமாக 3304 பேருக்கு தொற்று புதிதாக தொற்று பதிவானது. சென்னையில் 16 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 42 பேர் கொரோனாவால் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்.