Bomb Threatening: "பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்" சேலத்தில் பரபரப்பு..!
முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை.
ஈரோடு தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் இன்று காலை மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, சேலம், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சேலம், ஈரோடு, திருநெல்வேலி பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
பெற்றோர்கள் அச்சம்:
சேலம் மாவட்டம் குரும்பம்பட்டி உயிரியல் பூங்கா செல்லும் வழியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் எப்பொழுதும் போல பள்ளி செல்வதற்காக குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தனர். அப்போது பள்ளி நிர்வாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினர். பள்ளியில் வேலை புரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் திரும்பி சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை:
இதனையடுத்து வெடிகுண்டு காவல் ஆய்வாளர் கோவிந்தன் தலைமையிலான 8 பேர் குழு அடங்கிய வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் ரூபி உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர். சோதனை முடிவிலேயே பள்ளியில் வெடிகுண்டு உள்ளதா அல்லது வதந்தியா என்பது தெரியவரும். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.