Karthik Gopinath Arrest: தமிழக அரசு குறித்து அவதூறு.. ஆன்லைனில் பணமோசடி.. பாஜக யூ-டியூபரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு..!
பாஜக யூ – டியூபரை கார்த்திக் கோபிநாத்தை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக யூ – டியூபர் கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டு அம்பத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான உப கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதாக கூறி, இணையதளத்தில் கோயிலின் படத்தை காண்பித்து 34 லட்சம் வரை பணம் வசூலித்ததாக பாஜக யூ – டியூபர் கார்த்திக் கோபிநாத் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் அரவிந்த்குமார் போலீசில் புகார் அளித்தார்.
இதுமட்டுமன்றி தமிழக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாகவும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறுவாச்சூர் கோயில் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்ததாக அறநிலையத்துறை சார்பில் முன்னதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த புகார்களில் அடிப்படையில் ஆவடி மாநகர காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420, 409 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தினர். இந்த நிலையில்தான் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.