வழிமறித்த காட்டு யானை... ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை... அந்தியூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஒற்றை காட்டு யானை சாலையில் நின்று, ஆம்புலன்ஸ் வெளிச்சத்தை கவனித்த படி விலகாமல் நின்றது.அப்பெண்ணுக்கு பிரசவவலி அதிகமாகி ஆபத்தான நிலை ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் பிரசவம் நடந்தது.
ஆம்புலன்ஸில் பிரசவிக்கும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் அவ்வபோது நிகழ்வது வழக்கம். அதுவும் மேல் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் இருக்கும் மருத்துவ உதவியாளர் உதவியுடன் பிரசவம் நடந்தது ஆச்சர்யப்பட செய்துள்ளது. யானை குறுக்கே நின்று வழியை மறைத்ததால் தாமதமாகி, சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல முடியாமல் போயிருக்கிறது. அதனால் நடு வழியிலேயே பிரசவம் பார்த்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் அந்த பகுதியினரை நெகிழ செய்துள்ளது. அந்தியூரில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாய் சேயை காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அந்தியூர் அருகே வனப் பாதையில் யானை மறித்த நிலையில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் மேலும் முன்னேறி செல்ல முடியாமல் தடை பட்டு நின்றது. அதனால் ஆம்புலன்ஸிலேயே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா மலைப் பகுதி ஓசூரைச் சேர்ந்தவர் 25 வயதாகும் நந்தினி. இவரது குடும்பத்தார் கூலி வேலை செய்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டு, ஓசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக இரவு 11:30 மணிக்கு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கிளம்பினர். மணியாச்சிப்பள்ளம்வனப் பாதையில், இரவு 11:50 மணிக்கு ஒற்றை காட்டு யானை சாலையில் நின்று, ஆம்புலன்ஸ் வெளிச்சத்தை கவனித்த படி விலகாமல் நின்றது.அப்பெண்ணுக்கு பிரசவவலி அதிகமாகி ஆபத்தான நிலை ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் முதலுதவியை துவங்கினார். அதற்குள் யானை காட்டுக்குள் சென்று விட்டது.
யானை விலகி சென்றாலும், சீக்கிரமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாததாலும், கிட்டத்தட்ட பிரசவ நிலையை நெருங்கியதாலும் நந்தினிக்கு வேறு வழி இன்றி அங்கேயே பிரசவம் பார்க்க தீர்மானித்தனர். மருத்துவ உதவியாளர் உதவியால், சரியாக இரவு 12:12 மணிக்கு அப்பெண், ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து வந்து தொடர் சிகிச்சை வழங்கினர். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு, பாதி வழியிலேயே பிரசவ வலி எடுத்ததால், மருத்துவ உதவியாளர் அவருக்குப் பிரசவம் பார்த்த சம்பவம், அந்தப் பெண்ணின் உறவினர்களை நெகிழ வைத்திருக்கிறது. அதோடு, அவசர காலத்தில் பதற்றம் அடையாமல் தங்கள் வேலையை சிறப்பாக செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரையும், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளரையும் மருத்துவமனையில் இருந்தவர்கள் பாராட்டினர்.