Annamalai: "2024ல் பாஜக கூட்டணியில் 400 எம்பிக்கள்.. வீக் எண்ட் பிரதமர் ராகுல் காந்தி” - அண்ணாமலை பேச்சு
'என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்கினார்.
அண்ணாமலை பாதயாத்திரை:
கடந்த 9 ஆண்டுகள் பாஜக செய்த சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. ’என் மண் என் மக்கள்' என்கிற பெயரில் 168 நாட்கள் நடைபயணம் நடைபெறும் எனவும், இதில் 1700 கி.மீ தூரம் பயணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 168 நாட்கள் நடைபெறும் பாத யாத்திரையில் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியின் சாதனை குறித்த விளக்கப்புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார்கள். ராமேஸ்வரத்தில் தொடங்கும் பாதயாத்திரை, சென்னையில் நிறைவு செய்ய இருக்கிறது.
அண்ணாமலையின் பாதயாத்திரையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரத்தில் தொடக்க விழா நடைபெற்றது. ’என் மண் என் மக்கள்' என்கிற பாதயாத்திரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமித்ஷாவுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணாமலை பேச்சு:
இவ்விழாவில் பேசிய அண்ணாமலை, ”2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பின், உறக்கத்தில் இருந்து பாரத் மாதா எழுந்தார். உலக நாடுகள் கூட இதை ஒப்புக்கொள்கின்றன. அனைத்து நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை பெருமிதத்துடன் பார்க்கின்றன. இந்த யாத்திரை ஒவ்வொரு தொண்டனுடைய யாத்திரை. யாத்திரை என்பது நீண்ட, நெடிய வேள்வி. இந்தியாவில் நடப்பது சாமானியனின் ஆட்சி. பாரத தாய் விழித்து எழுந்து விட்டாள். தமிழ்த் தாய் விழித்து எழுந்து விட்டாளா? யாத்திரையின் போது தமிழ் தாயையும் உடன் அழைத்து செல்ல வேண்டும். இந்த யாத்திரை ஒவ்வொரு பாஜக தொண்டனின் யாத்திரை. ஆயிரம் ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு கிடைக்காத பெருமையை 9 ஆண்டுகளில் மோடி அளித்துள்ளார். மோடி அளவிற்கு எந்த பிரதமரும் தமிழை உயர்த்திப் பிடித்ததில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் திருக்குறளை பிரபலப்படுத்தவில்லை. ஆனால் மோடி பிரபலப்படுத்தினார். ஐ.நா. முதல் உலகம் வரை திருக்குறளை கொண்டு சென்றவர் மோடி. இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் முதலமைச்சராக இருப்பார்கள். இந்தியா என்ற கூட்டணியை வைத்துக் கொண்டு திங்கட்கிழமை நிதிஷ்குமார், செவ்வாய்கிழமை மம்தா பானர்ஜி, புதன்கிழமை கேசிஆர், வியாழன்கிழமை உத்தவ் தாக்கரே ஆகியோர் பிரதமராக இருப்பார்கள். வெள்ளிக்கிழமை புதிய பிரதமர் வருவார்கள் என்றும் சனி, ஞாயிறு அதாவது Weekend பிரதமராக ராகுல்காந்தி இருப்பார்” என்றும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவதே முக்கிய பணி. 2024ஆம் ஆண்டு மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார். 2024ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் 400 எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 40 எம்.பிக்கள் பாஜக சார்பாக வெற்றி பெறுவார்கள். நம்முடைய பாஜகவின் வளர்ச்சியை உறுதி செய்யும், நமது வெற்றியை உறுதி செய்யும் நடைபயணமாக இந்த பயணம் இருக்கும். நான் பட்டி தொட்டி எல்லாம் செல்ல போகிறேன். மக்களிடம் பேச போகிறேன்” என்றார் அண்ணாமலை.