Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
Anna University Case Judgement: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Anna University Case Judgement: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அண்ணா பல்கலை., வழக்கில் தீர்ப்பு:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அடைதொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் அவர் கைது செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, வெறும் 5 மாதங்களில் விசாரணை முற்றிலுமாக முடிக்கப்பட்டது. அதன் முடிவில், ஞானசேகரன் மீது சுமத்தப்பட்டு இருந்த 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாதம் 28ம் தேதி நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். அதேநேரம், குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் வரும் ஜுன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி, இன்று ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட 11 குற்றப்பிரிவுகளுக்கு தனித்தனியாக 11 தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தண்டனை குறைப்பு இன்றி ஏக காலத்திற்கும் சிறை தண்டனை அனுபவிக்கவும் என்பதோடு, 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஞானசேகரனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 இன் பிரிவுகள் 63(a), 64(1), 75(i)(ii), மற்றும் 75(i)(iii) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (FIR) படி, கோட்டூர்புரத்தில் வசிக்கும் ஞானசேகரன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி, அவரது வீடியோக்களைப் பதிவு செய்து, அவரது அடையாள அட்டையின் புகைப்படங்களை எடுத்ததோடு கொலை மிரட்டலையும் விடுத்துள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வரலாற்று குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது. இதுபோக அவருக்கு பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. விசாரணை முடிவில் குற்றவாளிக்கு எந்தவித கருணையும் காட்டாமல், அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என ரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதன்படி, தற்போது ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தொடரும் சர்ச்சை:
வழக்குப்பதிவு செய்த ஐந்தே மாதங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது, ஒருபுறம் ஆதரவையும், மறுபுறம் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி தரப்பினருக்கு தொடர்பு இருப்பதாலே, அவசர அவசரமாக வழக்கு விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதோடு, குற்றச்சம்பவத்தின் போது ஞானசேகரன் யாரையோ தொலைபேசியில் தொடர்புகொண்டு சார் என குறிப்பிட்டு பேசியதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. அந்த சார் யார்? எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.





















