விவசாய நிலத்தில் அறிவுசார் நகரமா? கொந்தளித்த அன்புமணி: திருவள்ளூர் மக்களை காக்க களமிறங்கிய போராட்டம்!
"திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை அழித்து அறிவு சார் நகரத்தை கொண்டு வந்தால் பாமக கடும் போராட்டத்தை நடத்தும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை"

விவசாய நிலங்களுக்கு பதிலாக வேறு ஏதாவது, மாவட்டத்தில் தரிசு நிலத்தில் அறிவுசார் நகரத்தை கொண்டு வரலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அறிவுசார் நகரத்திற்கு எதிராக அன்புமணி பிரச்சாரம்
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில், இன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் நடைபெறும் மேற்கொண்டார். அங்கு ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை அழித்து, தமிழக அரசு 1700 ஏக்கரில் அறிவுசார் நகரத்தை உருவாக்க இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி
அவற்றை கேட்டுக்கொண்ட அன்புமணி, விவசாய நிலங்களை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது உங்களுக்காக நாங்கள் இறங்கி போராடுவோம் என உறுதி கொடுத்தார். தொடர்ந்து விவசாயிகளுடன் இணைந்து, விவசாய நிலத்தில் இறங்கி அன்புமணி ராமதாஸ் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அப்போது அன்புமணியிடம், நாங்கள் உயிர் உள்ளவரை, எங்களுடைய விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் கடைசி வரை உங்களுக்காக போராடுவேன் என நம்பிக்கை அளித்தார்.
அறிவில்லாதவர்கள் செய்யும் செயல்
தொடர்ந்து மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: அறிவில்லாதவர்கள் தான் ஆற்றுப்பகுதியிலே விவசாய நிலங்களை அழித்து, அறிவுசார் நகரத்தை கொண்டு வருவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவார்கள் அவர்களை பாதுகாப்பார்கள். இந்த மண் நமக்கெல்லாம் சோறு போடுகின்றவன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சோறு போடுகின்ற மண்.
அடுத்த ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நம்முடைய சந்ததிகளுக்கு இந்த மண் சோறு போட வேண்டும். இந்த மண்ணை பாதுகாப்பது நம்முடைய கடமை. இந்த மண்ணை அழித்துவிட்டு போயிட்டால் நம்முடைய சந்ததிகள் என்ன சாப்பிடுவார்கள். பேப்பர் மற்றும் புத்தகத்தை சாப்பிடுவார்களா ? . விவசாயிகள் எங்களுக்கு சோறு போடுகிற கடவுள், நாங்கள் ஒருபோதும் அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும், விவசாய மண்ணையும் காப்பாற்ற வேண்டும்.
என்எல்சியை எதிர்த்து தனியாளாக போராடினேன்
இதேபோன்றுதான் மேல்மா பகுதியிலும் சிப்காட் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்எல்சி ஒரு மோசடி நிறுவனம். 60,000 ஏக்கர் விவசாய நிலத்தை அவர்கள் அழித்துவிட்டார்கள். இன்னும் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை அழிக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். நான் கடலூருக்கு சென்று என்எல்சி நிலத்தை கையகப்படுத்தாமல் தனி ஆளாக தடுத்து நிறுத்தி இருக்கிறேன்.
அறிவுசார் நகரத்திற்கு யார் வரப்போகிறார்கள்?. யாராவது இவர்களுக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள், இல்லையென்றால் பினாமி பெயரில் இவர்களே ஆரம்பித்த யூனிவர்சிட்டியாக கூட இருக்கலாம். எப்படி ஏமாற்ற வேண்டும், எப்படி திருட்டுத்தனம் செய்ய வேண்டும் என்பதில் திமுக பிஎச்டி முடித்து இருக்கிறது.
அமெரிக்காவில் ஒரு யூனிவர்சிட்டி தொடங்க வேண்டுமென்றால் 5 ஏக்கர் நிலத்தில் தொடங்கி விடுகிறார்கள். 1700 ஏக்கரை கையகப்படுத்தி, அதில் 200 ஏக்கர் கல்லூரிக்கு கொடுத்துவிட்டு, மீதி இடத்தை விற்று விடுவார்கள் என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
திருவண்ணாமலை அல்லது திருச்சியில் கொண்டு வாருங்கள்
அறிவுசார் நகரம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அறிவுசார் நகரம் விவசாய நிலங்களை அழித்து இந்த மண்ணில் வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இந்த திட்டத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தரிசு நிலங்கள் இருக்கிறது.
தரிசு நிலத்தில் அந்த திட்டத்தை கொண்டு வாருங்கள். அறிவுசார் நகரத்தை திருச்சியில் கொண்டு வாருங்கள், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொண்டு வாருங்கள். அரசு நிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வாருங்கள் என வலியுறுத்தினார்.





















