Anbumani Ramadoss: விவசாயிகளுக்கு குண்டர் சட்டமா? மனசாட்சி இருக்கிறதா? - அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!
விளை நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: விளை நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் போராட்டம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாகத்திற்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் அரசு மற்றும் விவசாய நிலம் அடங்கும். இதனால், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 120 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதை அடுத்து, போராட்டம் நடத்திய 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்னதர். பின்னர், கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கடும் எதிர்ப்பை கிளப்பியது. அதோடு, இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டம் பாய்ந்த 19 நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், விவசாய நிலங்கள் பறிப்பதை கைவிடக்கோரி பட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மேல்மா கூட்டு சாலையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
"விளைநிலங்களை அழித்து தொழில்சாலைகள் வேண்டாம்”
இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ”சிப்காட் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தமிழக அரசு கைது செய்ததை பாமக கண்டிக்கிறது. திருவண்ணமாலை தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு தொழில்வளம், வேலைவாய்ப்பு என அனைத்தும் தேவைப்படுகிறது. ஆனால், விளை நிலங்களை அழித்து திமுக அரசு தொழிற்சாலைகள் அமைக்கிறது. அப்படி, விளைநிலங்களை அழித்து தொழில்சாலைகள் எங்களுக்கு வேண்டாம். இது உண்மையான வளர்ச்சி கிடையாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றது. அங்கு நீங்கள் சிப்காட்டை தொடங்குகள். யாரும் தடுக்கமாட்டார்கள். ஆனால், விவசாய நிலத்தை அழித்து தான் சிப்காட் தொடங்குவோம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு எதிராக பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தும்” என்றார்.
அன்னூருக்கு ஒரு நியாயம்? செய்யாறுக்கு ஒரு நியாயமா?
தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் விவசாயி நிலங்கள் பெரிதும் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காது. தேர்தல் அறிக்கையில் விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று திமுக கூறியது. ஆனால், அதற்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதைபோன்று தான் அன்னூர் சிப்காட் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அன்னூருக்கு ஒரு நியாயம்? செய்யாறுக்கு ஒரு நியாயமா?. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த அரசுக்கு மனசாட்சி இருக்கிறதா? எனவே, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய வேண்டும். அரசு நிலத்தில் சிப்காட்டை தொடங்குவோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை பாமக தொடர்ந்து போராட்டத்தை நடத்தும்.
விவசாயிகளுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விளை நிலங்களை அரசு அழித்து வருகிறது. இதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். இது பாமக கட்சியின் பிரச்னை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சி பிரச்னை" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.