Chennai Pollution: காலை முதல் இரவு வரை வெடித்த பட்டாசுகள்.. எகிறிய காற்று மாசுபாடு.. பொதுமக்கள் அவதி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் எங்கும் புகைமூட்டமாக உள்ளது பொதுமக்களை அவதியடைய வைத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் எங்கும் புகைமூட்டமாக உள்ளது பொதுமக்களை அவதியடைய வைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (நவம்பர் 12) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். தீபாவளி பண்டிகை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். ஆனால் இப்பண்டிகை கடந்த சில ஆண்டுகளாக கடும் கட்டுப்பாட்டுகளோடு கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை ஒரு மணி நேரம் என 2 மணி நேரம் மட்டுமே நேரக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்த கூடாது, எளிதில் தீப்பிடிக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் வெளியிடப்பட்டது. ஆனால் அதையும் மீறி பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனிடையே நேற்று தீபாவளி பண்டிகையன்று காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை அறிவுறுத்தியது. சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததற்காக 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) இரவே சென்னையில் மக்கள் பட்டாசுகளை வெடிக்க தொடங்கினர்.
ஏற்கனவே பனிக்காலம் என்பதால், அதனோடு புகையும் சேர்ந்து கொண்டு நவம்பர் 11 ஆம் தேதி காலையில் சென்னையில் பல இடங்களில் காற்று மாசுமாடு மோசமடைந்தது. தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இப்படியான நிலையில் மெயின் பிக்சர் டே எனப்படும் தீபாவளி தினத்தில் அதிகாலை தொடங்கி இரவு வரை மக்கள் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னையில் தற்போதைய நிலவரப்படி அபிராமபுரத்தில் 122,எண்ணூரில் 112, கொரட்டூரில் 119, வேளச்சேரியில் 122, அரும்பாக்கத்தில் 134, பெருங்குடியில் 119, நீலாங்கரையில் 122 என காற்று தரமானது பதிவாகியுள்ளது. காற்றின் தர குறியீடு 0 முதல் 100 அளவுகள் வரை இருந்தால் மட்டுமே பாதிப்புகள் இல்லை என்பது பொருள். காற்றின் தரம் 100க்கும் மேல் செல்லத் தொடங்கினாலே இது தான் மோசமான காற்றின் தரத்தின் ஆரம்ப கட்டம் ஆகும் என்பதால் சென்னையில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச நோய் உள்ளவர்கள் அதிக நேரம் வெளியே இருப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.