(Source: ECI/ABP News/ABP Majha)
EPS: சுட்டெரிக்கும் வெயில்: சேலத்தில் நீர் மோர் பந்தலை திறந்துவைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இபிஎஸ் புறப்பட்டு சென்ற ஓரிரு நிமிடங்களில் அவரை வரவேற்பதற்காக வந்திருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீர் மோர் பந்தலில் குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அள்ளிச் சென்றதால் பரபரப்பு.
தமிழ்நாடு முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக சேலம், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் பதிவாகி வருகிறது. சேலத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 105 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் மேல் பதிவாகி வருகிறது. இத்துடன் வெப்ப காற்றும் ஆங்காங்கே வீசி வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், கம்மங் கூழ், ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, திராட்சை, முலாம்பழம், இளநீர், நுங்கு, வெள்ளரி, குளிர்பானம் உள்ளிட்டவற்றை வழங்கினார். முன்னதாக நிகழ்விடத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செண்டை மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலிலும் அதிமுக பொதுச் செயலாளர் வரவேற்க அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் சாலையில் குவிந்ததால் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மாநகருக்கு செல்லும் பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்ற ஓரிரு நிமிடங்களில் அவரை வரவேற்பதற்காக வந்திருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்தியடித்துக் கொண்டு நீர் மோர் பந்தலில் குவித்து வைக்கப்பட்டிருந்த நுங்கு, இளநீர், அண்ணாச்சி முலாம்பழம், தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் ஜூஸ் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இதனைப் பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டதா? அல்லது அதிமுக தொண்டர்களுக்காக திறக்கப்பட்டதா? என முனுமுனுத்தபடி சென்றனர்.