மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் புகார்!
சசிகலா குறித்து விமர்சித்ததால் தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் இன்று திண்டிவனத்தில் உள்ள ரோசணை காவல் ஆய்வாளர் வள்ளியிடம் புகார் ஒன்றை அளித்தார். அம்மனுவில், "கடந்த 7-ம் தேதி சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், அடியாட்களை வைத்து கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகின்றனர். மேலும், கைப்பேசியில் என்னை அச்சுறுத்தும் வகையில், கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இன்றுவரை சுமார் 500 போன் அழைப்புகள் செய்துள்ளனர்.
இன்னும் கைப்பேசி, சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும், சசிகலா பற்றிப் பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் என, மிரட்டும் தொனியில் பேசிவருகின்றனர். இதற்கு சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும். எனவே, கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாகவும் பேசக் காரணமாக இருந்த சசிகலா மீதும், என் கைப்பேசிக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். அப்போது, வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி உடனிருந்தார்.
கடந்த 7ஆம் தேதி விழுப்புரத்தில் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சசிகலா ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த ஆவேச பதிலில், ''இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே, அவருக்கு உதவியாளராக வந்தார். அவ்வளவுதான். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் இப்போது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது. எங்கள் மூத்தவர் காளிமுத்து, கருவாடு மீன் ஆகாது என்று சொன்னார். இது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த வசனம். கருவாடு கூட மீனாகிவிடலாம். ஆனால், அதிமுகவில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது. ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும்வரை யாராலும் இந்த இயக்கத்தை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு சசிகலா அல்ல ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது” சி.வி.சண்முகம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.