ADMK Case: ”எல்லாத்தையும் தொண்டர்களிடம் கேட்க முடியாது.. அதிமுக முடங்கியுள்ளது” - நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு!
அதிமுக தொடர்பான அனைத்து முடிவுகளையும் தொண்டர்களை கேட்டு எடுக்க முடியாது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தொடர்பான அனைத்து முடிவுகளையும் தொண்டர்களை கேட்டு எடுக்க முடியாது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு தொடர்பான வழக்கு:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து, அக்கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கோடை விடுமுறை காரணாமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் ஓபிஎஸ் தரப்பு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளன.
அதிமுக தரப்பு வாதம்:
அதனை தொடர்ந்து அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது ”கட்சியின் அடிப்படை விதிகளின்படி பொதுக்குழுவின் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. உட்சபட்ச அதிகாரம் பெற்றது பொதுக்குழுதான். ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அடிப்படை உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் கட்சி விதிகளுக்கு உட்பட்டவர்கள்தான். கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் பொழுக்குழுவால் நடவடிக்கை எடுக்க முடியும். ஒருங்கிணைப்பாளர்களை விட உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுவுக்குதான் உள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் செய்யும் செயல்களால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கிப்போயுள்ளன. கட்சியின் பெயரை சொல்லி அவர்கள் தன்னிச்சையாக நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்” எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.