ADMK: அதிமுக போராட்டம் மீண்டும் ஒத்திவைப்பு.. கட்சி தலைமை கொடுத்த புதிய விளக்கம்
தமிழக அரசை எதிர்த்து நடைபெற இருந்த போராட்டத்தை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஒத்திவைப்பதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதிமுக போராட்டம்:
திமுக தலைமையிலான தமிழக அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை போன்றவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9ம் தேதி அன்று பேரூராட்சிகளிலும், நாளை (13-ம் தேதி) நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், வரும் 14-ம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதிமுக போராட்டம் ஒத்திவைப்பு:
ஆனால் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, வரும் 16-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தி நிலையில் நாளை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/lLo9dwaiTU
— AIADMK (@AIADMKOfficial) December 12, 2022
அதிமுக அறிக்கை:
இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகத்தின் பேரில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மேற்கு மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நாளை மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நடைபெற இருந்த கண்டன ஆர்பாட்டங்கள் மட்டும் வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு, அனைத்து ஒன்றியங்களிலும் நாளை மறுநாளும், ஒத்திவைக்கப்பட்ட பேரூராட்சிகளில் வரும் 16ம் தேதி அன்றும் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இரட்டை தலைமை விவகாரம்:
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொதுக்குழுவுக்கு எதிராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார். ஆனால் அதை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய, மனுவை விசாரித்த நீதிபதிகள் இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். அதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.






















