EPS: ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி..! கைமாறப்போகும் கோப்புகள்..! நடக்கப்போவது என்ன..?
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று சந்திக்க உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். அதேநேரம் அதிமுக கட்சியை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து, ஒ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனால் இருதரப்புக்கு இடையேயான மோதல் தீவிரமடைய, உட்கட்சி பூசல்களால் அதிமுகவின் செயல்பாடு முடங்கியது. இதனிடையே, தமிழகத்தில் தாங்கள் தான் எதிர்க்கட்சி என பாஜக தீவிரமாக செயல்பட தொடங்கியது.
தீவிரம் காட்டும் எடப்பாடி பழனிசாமி:
இதனிடையே, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனும் எடப்பாடி பழனிசாமியின் பதவியும் அண்மையில் காலாவதியானது. இந்நிலையில் தான், சமீபத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், மயிலாடுத்துறை மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து நிவாரண உதவிகள் வழங்கினார். 2024 அதிமுக தலைமையில் மிகப்பெரும் கூட்டணி அமைக்கப்படும் எனவும், அமித் ஷா தமிழகத்திற்கு வந்தால் அவரை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் எடப்பாடிபழனிசாமி கூறினார். இதனால், கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட ஈபிஎஸ் முடிவு செய்துள்ளதாகவும், அதிமுகவின் ஒரே தலைமை தானே என முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும், மழைநீர் தடுப்பு பணிகளை அரசு முறையாக செய்யவில்லை எனவும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும், ஆளும் திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆளுநரை சந்திக்கிறார் ஈபிஎஸ்:
தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 12:45 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு ஊழல் புகார் குறித்து ஆளுநரிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், அண்மையில் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஏற்கனவே ஆளுநரிடம் வழங்கி இருந்தார். ஆளுநரின் திராவிடம் மற்றும் சனாதனம் தொடர்பான கருத்துகளுக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், ஆளுநருக்கு, ஆளும் திமுக கூட்டணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், ஆளுநர் உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.