Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - இத படிங்க முதல்ல
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏற்கனவே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தற்போது கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது.
சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில்கள். அதிலும், பண்டிகை நாட்களில் ரயில்களில் கூட்டம் அலைமோதும். முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும். அந்த அளவிற்கு, வெளியூர்களுக்கு செல்ல, ரயில்களை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், வரவிருக்கும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் ஏற்கனவே 60 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, தற்போது கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2025 அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜையும், 20-ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால், பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு 60 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி சிறப்பு ரயில்கள்
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பயணிகளின் தேவைக்கேற்ப, கூடுதல் சிறப்பு ரயில்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்
அதன்படி, செப்டம்பர் 22, 29 அக்டோபர் 6, 13, 20-ம் தேதிகளில், திங்கட்கிழமை தோறும், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலில் இருந்து இரவு 11,50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பிற்பகல் 1.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
இதேபோல், மறுமார்க்கத்தில், செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21-ம் தேதிகளில், கன்னியாகுமரியிலிருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, கன்னியாகுமரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலில் 2 ஏசி அடுக்கு பெட்டிகள், 5 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 4 பொது 2-ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்
இதேபோல், திருநெல்வேலியிலிருந்து செங்கல்பட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 26, 28, அகடோபர் 3, 5, 10, 12, 17, 24, 26-ம் தேதிகளில், செவ்வாய் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில், அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், அதே தேதிகளில், செங்கல்பட்டிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், அதே நாளில் திருநெல்வேலிக்கு இரவு 11.55 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(20.09.25) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.





















