PTR Palanivel Thiagarajan: மதங்களை ஆயுதமாக வைத்து, மக்களை பிரிக்க நினைத்தால், அது தென்னிந்தியாவில் பலிக்காது - பி.டி.ஆர்
ABP Southern Rising Summit 2023: மதங்களை ஆயுதமாக வைத்து தென்னிந்தியாவில் மக்களைப் பிரிக்க முடியாது. தென்னிந்தியாவில் மதம் ஜனநாயகமாக உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
ABP's Southern Rising Summit: புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னயில் இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேது நடைபெற்று வருகிறது.
இந்தியாவுக்கு ஏன் கூட்டாட்சி தேவை - பி.டி.ஆர்
இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடாகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும், விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும், ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023' என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
மிகவும் உற்சாகமாக நடந்து வரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்தியாவுக்கு ஏன் கூட்டாட்சி தேவை என்ற தலைப்பில் பேசியதாவது, ”ஜனநாயக நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்க வேண்டும். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி என்பதற்கும் தற்போது உள்ள வளர்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. மாநிலங்களின் இடையேயான இடைவெளி மிகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பீகாரை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. ஒரே பொருளாதாரத் திட்டம் எங்கள் இருவருக்கும் எப்படி பொருந்தும்? இரு மாநிலங்களுக்கும் வேறு வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே வேறு வேறு தீர்வுகள் தேவைப்படுகின்றன.மதங்களை ஆயுதமாக வைத்து தென்னிந்தியாவில் மக்களைப் பிரிக்க முடியாது. தென்னிந்தியாவில் மதம் ஜனநாயகமாக உள்ளது.
குஜராத் முதலமைச்சராக இருந்த வரை நரேந்திர மோடிதான் எல்லா காலத்திலும் சிறந்த கூட்டாட்சிவாதி. உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணம் சென்று மக்கள் பயன்பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு தேவை. உலகம் முழுவதும் ஜனநாயகம் பற்றிய கருத்து சுயமாக முடிவெடுப்பதை தான் குறிப்பிடுகிறது. மக்களுக்கு அருகில் அதிகாரத்தை நகர்த்த வேண்டும். மூன்று டிகிரி தள்ளி இருந்து அதிகாரத்தை செலுத்தக் கூடாது. மாநில அரசுக்கென்று ஒரு பங்கு உள்ளது. நான் தான் இந்த நாட்டின் தந்தை என்ற முறையில் வழிநடத்தக்கூடாது. நம் நாடு பன்முகத்தன்மை வாய்ந்தது” என பேசினார்.