நாங்குநேரி சம்பவம் கொடூரமானது...தாங்கிக்கொள்ள முடியா வேதனை - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் சின்னத்துரை என்ற மாணவரை, அவருடன் படிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது கொடூரமானது.
நாங்குநேரி சம்பவம் கொடூரமானது என்ற அன்புமணி ராமதாஸ் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் சின்னத்துரை என்ற மாணவரை, அவருடன் படிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளது. இந்தத் தாக்குதலில் சின்னத்துரையின் சகோதரியும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தக் கொடிய நிகழ்வு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
மாணவர் சின்னத்துரை சிறப்பாக படிப்பவர் என்று கூறப்படுகிறது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேறு சில மாணவர்கள், அவரை தொடர்ந்து சாதியின் பெயரால் சீண்டி வந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் அவரை தாக்குவது, அவமதிப்பது. வேலைவாங்குவது என கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றனர். இந்தக் கொடுமைகளை தாங்க முடியாத மாணவர் சின்னத்துரை, பள்ளியை விட்டு விலக முடிவு செய்திருக்கிறார். ஆனால், அதை அனுமதிக்காத பள்ளி நிவாகம், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது புகார் எழுதி வாங்கியுள்ளது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த மாணவர்கள் சின்னத்துரையை அவரது வீட்டிற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். மாணவர்களின் செயல் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமையும், குற்றமும் ஆகும்.
சமுதாயத்தின் அனைத்துக் கேடுகளில் இருந்தும் மாணவர்களைப் போற்றிப் பாதுகாப்பதற்கான கூடு தான் பள்ளிகள் ஆகும். மனதில் மண்டிக்கிடக்கும் அனைத்து வகையான இருளையும் அகற்றுவதற்கான ஒளிவிளக்கு தான் கல்வி ஆகும். ஆனால், கல்வி வழங்கும் பள்ளியிலேயே சாதிவெறி மண்டிக் கிடப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பள்ளிகளில் சாதிவெறி என்பது கல்வியின் நோக்கத்தை சீரழிக்கும். மாணவச் செல்வங்கள் தான் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள், அவர்கள் மனதளவில் கூட மாசு படாதவர்களாக இருக்க வேண்டும் அதற்கேற்ற வகையில் தான் கல்வி முறையும், பாடத்திட்டமும் வடிவமைக்கப்பட வேண்டும்.
நாங்குநேரியில் நடைபெற்றது போன்ற கொடுமையும், துயரமும் தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் நிகழக்கூடாது. அதற்காக சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் வேளையில், மறுபுறம் மனமாற்றத்தை மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளும் தொடர வேண்டும். அதற்காக பள்ளிகளில் சாதிவெறி ஒழிக்கப்பட்டு அன்பு ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அன்புசூழ் உலகாக பள்ளிகள் மாற்றப்பட்டால் அங்கு பகைக்கும், வெறுப்புக்குப் இடமிருக்காது.
தாக்குதலில் காயமடைந்த சின்னத்துரை, அவரது சகோதரி ஆகிய இருவரும் விரைவாக உடல் நலம்தேறி வீடு திருப்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். சினத்துரை தாக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உயிரிழந்த அவரது தாத்தா கிருஷ்ணனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்