Pongal Gift: 4.40 லட்சம் பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வாங்கவில்லை.. தமிழ்நாடு அரசு தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி..!
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பரிசுத் தொகையில் ரூ.1000 பணத்தை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் பணம் மற்றும் பொங்கல் பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் அதிகப்பட்சமாக ரூ.2,500 வரை பணம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு மே மாதம் திமுக அரசு புதிதாக பொறுப்பேற்ற நிலையில், கடந்தாண்டு பொங்கலுக்கு பணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் இவற்றில் பல பொருட்கள் தரமாற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்திய நிலையில் அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தான் நடப்பாண்டு பொங்கலை கொண்டாட சூப்பரான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சியடைந்த மக்கள்
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் வீடு, வீடாக தொடங்கியது. தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு பரிசுப்பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி பொங்கலுக்கு முன், பின் என அரசும் பொங்கல் பரிசு தொகுப்பை அனைவரும் பெறுவதற்கான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டது. இதனால் மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்று மகிழ்ந்தனர்.
பரிசுத் தொகுப்பு வாங்காதவர்கள் விபரம்
பொங்கல் பண்டிகையை முடிந்து பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர் சென்ற காரணத்தால் பரிசுத்தொகுப்பை அனைவருக்கும் வழங்க முடியவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட ரூ.1000 பணத்தை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 2,18,86, 123 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கப்பட்ட நிலையில், இவற்றில் சிலர் பணம் வேண்டாம் என சொல்லி விட்டனர். இதன்மூலம் அரசுக்கு 43.96 கோடி ரூபாய் திரும்பி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.