Sexual Harassment | ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 30 மாணவிகள் பாலியல் தொல்லை புகார்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை. கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். நங்கநல்லூரியில் வசித்துவரும் இவர் அந்த பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுத்து வருகிறார். இந்த நிலையில், இந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்களை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார். மாணவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த குற்றச்சாட்டுப்படி, ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணமாக பாடம் நடத்த முயற்சித்ததும். மாணவிகளை திரைப்படத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டதும் தெரியவந்தது.
மேலும், ஆசிரியர்கள் – மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகளுக்கான வாட்ஸ்அப் குழுக்களில் ஆபாச படங்களுக்கான இணைப்புகளை பகிர்ந்திருப்பதும், மாணவிகளை நள்ளிரவில் வீடியோ கால் செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பள்ளி ஆசிரியரின் இந்த அதிர்ச்சி அளிக்கும் செயலால் அவரை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். உடனடியாக அவர் பணிபுரியும் பள்ளியில் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். சென்னை நங்கநல்லூரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். ஆனால், ஆசிரியர் ராஜகோபாலன் தனது செல்போனில் இருந்த வாட்ஸ் அப் உரையாடலை நீக்கியிருந்தார். இதையடுத்து, தொழில்நுட்ப உதவியுடன் நீக்கப்பட்ட வாட்ஸ் அப் உரையாடலை போலீசார் மீட்டனர். இதை அடிப்படையாக வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆசிரியர் ராஜகோபாலன் இதுபோன்ற விரும்பத்தக்காத செயல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பள்ளியில் தன்னைப்போன்றே மேலும் சில ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும் ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்திருந்தார். அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து போலீசார் நேற்று இரவு அவரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும், ஆசிரியர் ராஜகோபாலன் மீது வேறு யாரேனும் பாலியல் புகார் அளிக்க விரும்பினால் 94447 72222 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீசாரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயிலும் மாணவிகள் என 30-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்துள்ளனர். புகார் அளித்துள்ள ஒவ்வொரு மாணவிகளிடமும் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பின்னர், அந்த புகார்களின் அடிப்படையில் சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் பல மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.