Thamirabarani Shooting: தாமிரபரணி துப்பாக்கிச்சூடு 22ம் ஆண்டு நினைவு தினம்: ட்ரெண்டாகும் ‛தாமிரபரணி படுகொலை’ ஹேஷ்டேக்!
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிசூடு நடந்ததன் 22ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
மாஞ்சோலை தொழிலாளர்களின் 22ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி தாமிரபரணி படுகொலை ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வருகிறது. 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைப்போல, 1999ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் உயிரிழ்ந்ததற்கான நினைவுதினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அருகே உள்ள மாஞ்சோலை பகுதியில் இருக்கும் 8,374 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து பி.பி.டி.சி எனும் பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது. 1952ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அந்த நிலம் அரசுடமையாக்கப்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியை அனுகி அந்த ஒப்பந்தத்தை பிபிடிசி நிறுவனம் புதுப்பித்துக் கொண்டது.
பிபிடிசி நிறுவனம் நடத்தி வந்த தேயிலைத் தோட்டத்தில் பல தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுக்கு குறைவான கூலி மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு உரிமைகளும் மறுக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளுடன் இணைந்து அவர்கள் அடிக்கடி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். தங்களது கூலியை 150 ரூபாயாக உயர்த்தக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொழிலாளர்களை திரட்டி 1999ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாலர்கள் உள்ளிட்ட 652 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். தங்கள் கணவர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்திய பெண்களையும் காவல்துறை கைது செய்த நிலையில், கைதுசெய்யப்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க கோரியும், கூலி உயர்வை கொடுக்க கோரியும் ஜூலை 23ஆம் தேதியன்று பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க திட்டமிடப்பட்டது.
இப்பேரணியில் புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக ஐக்கிய ஜமாஅத் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 5000க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கியபோது, பேரணியானது காவல்துறையினரால் 50 மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டதால், ஆட்சியரை சந்தித்து மனுக்கொடுப்பதற்கு மட்டும் அனுமதிக்க அரசியல்கட்சி பிரதிநிதிகள் சார்பில் காவல்துறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கோரிக்கையை காவல்துறையினர் மறுக்கவே தாமிரபரணி ஆற்றின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை அடைய பேரணியின் ஒரு குழுவினர் முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாலும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாலும் அச்சமடைந்த பொதுமக்கள் ஆற்றை கடந்து தப்பிக்க முயன்றபோது பொதுமக்களை காவல்துறையினரே ஆற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. மக்களை காப்பாற்ற முயன்ற பத்திரிக்கையாளர்களும், அதனை படம்பிடித்த பத்திரிக்கையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். காவல்துறையின் இத்தாக்குதலில் ஒரு வயது குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது மத்தியில் பாஜக அரசும் மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்தனர். முதல்வராக இருந்த கருணாநிதி இச்சம்பவத்தை விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார். கைது செய்யப்பட்ட 652 பேரும் ஜூலை 28ஆம் தேதி விடுவிக்கப்பட நிலையில், உயிரிழந்தவர்களின் உடலை வாங்க உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. ஐந்து நாட்கள் காத்திருப்புக்கு பிறகு அரசே உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தது. நீதிபதி மோகன் தாக்கல் செய்த அறிக்கையில், உயிரிழந்தவர்களில் 11 பேர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் காயம் காரணமாக இறந்ததாகவும் அறிக்கை சமர்ப்பித்தார், அரசின் பிணக்கூறாய்வில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதால் மட்டுமே காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதாக முதல்வர் கருணாநிதி இச்சம்பவம் குறித்து தெரிவித்தார். இச்சம்பவத்தை நினைவுகூற தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவுச்சின்னம் அமைக்க இதுநாள் வரையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதை நினைவு கூறும் விதமாகனே இன்று ‛தாமிரபரணி படுகொலை’ ஹேஷ்டேக் போடப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.