Teacher's Hunger Strike: அமைச்சர் பொன்முடி உத்தரவாதம்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற ஆசிரியர்கள்..!
கடந்த ஐந்து நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பழச்சாறு அருந்தி தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை 57 வயதாக உயர்த்த வேண்டும், அரசாணை 149 இல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டவர்கள் 5ஆவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படாதவர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
முடிவுக்கு வந்த உண்ணாவிரத போராட்டம்:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் வந்து உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2013ம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பழச்சாறு அருந்தி தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
பணி வழங்குவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது இதன் காரணமாக சட்ட வல்லுநர்களுடனும் முதலமைச்சரிடமும் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் நேரில் வந்து பேச வேண்டும். வெளிநாட்டில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாகவாது பேச வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
அமைச்சருடன் சந்திப்பு:
தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி போராட்டக்காரர்களுடன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கூறினார் , அதற்கும் செவி சாய்க்காமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வந்தவர்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு நேரிலேயே வந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, ”முதலமைச்சர் உத்தரவுப்படி காலையிலேயே உங்கள் பிரதிநிதிகளை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய உள்ளேன். உங்களுடைய கோரிக்கையில் அதில் உள்ள நியாயங்களை புரிகிறது, சீனியாரிட்டி படி பணியமத்துவதை பற்றி சட்ட வல்லுநர்களுடன் பேசி கருத்துக்களை பெற வேண்டி உள்ளது. அடுத்த வாரத்தில் இதற்கான நியாயமான தீர்வை முதல்வர் கொடுப்பார் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். அதனால் நீங்கள் இந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
உறுதி:
அதன் பிறகு அமைச்சர் பொன்முடி கையால் பழச்சாறு வாங்கி அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி “இன்று தலைமைச் செயலகத்தில் இவர்களது பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளோம். அவர்களது கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று இதில் சட்ட சிக்கல் இல்லாத வகையில் அதை களைவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று உறுதி அளித்து இருக்கிறேன் அவர்களும் உண்ணாவிரதத்தை கைவிட்டு இருக்கிறார்கள்” என்று கூறினார்.