(Source: ECI/ABP News/ABP Majha)
வேலூர் அருகே வாகன சோதனையில் 2 லட்சம் மதிப்புள்ள புதிய 500, 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்
கொடுக்கும் பணத்திற்கு இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறும் வழிப்பறி மோசடி கும்பலிடம் பொது மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- வேலூர் சரக டிஐஜி வேண்டுகோள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுச் சேலை வியாபாரி கனகராஜ் என்பவரிடம் காவல் துறை என கூறிய இரண்டு கும்பல், கொடுக்கும் பணத்திற்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து காரில் தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி கனகராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று வெங்கிளி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது நிற்காமல் சந்தேகத்திற்கிடமாக வேகமாக சென்ற காரை தனிப்படை காவலர்கள் விரட்டி பிடித்து கைது செய்து காரில் இரண்டு பைகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்து தப்ப முயன்ற 6 பேரை கைது செய்தனர்.
மேலும் தனிப்படை காவல் துறையினர், ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள பழைய குற்றவாளிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த பெருமாள், வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், நரேஷ் குமார், வேலூர் பொய்கை பகுதியை சேர்ந்த டேனியல் மற்றும் சுரேஷ், மாதனூர் சின்னத்தோட்டாளம் பகுதியை சேர்ந்த சரத் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு கார்கள், 9 செல்போன்கள், காவல்துறை சீருடை, போலி வாக்கி டாக்கி மற்றும் 2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும் பறிமுதல் செய்து தனிப்படை காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் வழிப்பறி கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் காவல்துறை சீருடைகள் உள்ளிட்டவைகளை வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு ஆம்பூர் காவல் நிலையத்தில் பார்வையிட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த தனிப்படை காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, ஆம்பூர் அருகே பட்டுப்புடவை வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்ததாகவும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருவதாக தெரிவித்த அவர், கொடுக்கும் பணத்திற்கு இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறும் வழிப்பறி மோசடி கும்பலிடம் பொது மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்று யாரேனும் கூறினால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாவட்ட எல்லைப் பகுதிகளில் வாகன சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல், வாகனச் சோதனை உள்ளிட்டவைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும். காவல் துறையினரின் வாகன சோதனையின் போது காவல் துறையினர், காவல் துறையில் இல்லாதவர்களை வாகன சோதனையின் போணு உடன் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.