Kallakurichi Violence: கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை... நடவடிக்கை பாயும் - மாவட்ட ஆட்சியர் பேட்டி
பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர்.
![Kallakurichi Violence: கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை... நடவடிக்கை பாயும் - மாவட்ட ஆட்சியர் பேட்டி 144 Prohibition in Chinna Salem area School Issue School Student Death Kallakurichi Protest Kallakurichi Violence: கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை... நடவடிக்கை பாயும் - மாவட்ட ஆட்சியர் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/17/648328cdec959e7b3d9c4c6f5a1a3ac51658050401_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சின்ன சேலம் பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்தை கட்டுப்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜீலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி பள்ளி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Violent protests break out over recent death of class XII girl at a private residential school in Kallakurichi.#Srimathi #Kallakurichi #JusticeForDefenceStudents #justiceforsrimathi pic.twitter.com/1wQRNMyS2l
— Chaudhary Parvez (@ChaudharyParvez) July 17, 2022
மாணவியின் பிரேதத்தை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவியின் உடலை வாங்க மறுத்து இன்று மாணவி உயிரிழந்தது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சாலை மறியலில் ஈடுப்பட்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது போராட்டம் சிறிது நேரத்தில் கலவரமாக மாறி மாணவியின் உறவினர்கள் காவல்துறை வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களை கட்டுபடுத்த காவல்துறையினர் தடியடி நடத்த தொடங்கினர்.
உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார், டிஐஜி பாண்டியன் உள்பட 20க்கு மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில், பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர்.
இந்நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி தாலுகாவில் உள்ள சின்ன சேலம், நயினார் பாளையம் ஆகிய 2 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு உரிய விசாரணை நடைபெற்று கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதை முன்னுரிமையாக எடுத்து அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில்,பள்ளி தரப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)