TET Exam: டெட் தேர்வில் பாஸ் ஆகாத 1,747 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - விரைவில் பணி நீக்கமா..?
பல முறை அவகாசம் கொடுத்தும் டெட் தேர்வில் 1,747 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சியடையாத நிலையில், அவர்களை பணிநீக்கம் செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பல முறை அவகாசம் கொடுத்தும் டெட் தேர்வில் 1,747 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சியடையாத நிலையில், அவர்களை பணிநீக்கம் செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இந்தச் சட்டத்தை மத்திய அரசு 2009-ல் அறிமுகம் செய்தாலும் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து புதிதாக ஆசிரியர் பணியில் சேர்பவர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் டெட் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் டெட் தேர்வெழுத அவகாசம் தரப்பட்டது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. எனினும் நீதிமன்றம் சிறுபான்மையின பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தது.
காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், டெட் தேர்வுகள் நடைபெற்றன. ஆனாலும் ஏராளமான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தனர். கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெட் தேர்வில், 1,747 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாம்: Scholarship Scheme: மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகள் என்னென்ன?- விவரம்
இதையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் இருக்கத் தகுதி கிடையாது என்று அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் காகர்லா உஷா கூறும்போது, ’’அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் டெட் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதனால் அவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க முடியாது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களைப் பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும்’’ என்று காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்க சினிமா பிரபலங்களை வைத்து காணொலி; தமிழக அரசு புதுமுயற்சி!
https://tamil.abplive.com/education/tamil-nadu-government-has-taken-initiation-to-find-students-who-are-not-attending-classes-80499