Yercaud Dog Show 2024: ஏற்காடு கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி
நாய்கள் உரிமையாளர்களின் கட்டளைக்கு கீழ் படிதல், சாகசம் நிகழ்த்துதல், மோப்ப சக்தி ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.
ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்காடு கோடை விழாவை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏற்காடு வந்த வண்ணம் உள்ளனர்.
நாய் கண்காட்சி:
இந்த நிலையில் இன்று ஏற்காடு கோடை விழாவில் ஏற்காடு ஏரி அருகே உள்ள திடலில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இணை இயக்குநர் தலைமையில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில், நாட்டினங்களான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட நாய்களும். ஜெர்மன் ஷெப்பர்டு, அல்சேஷன், டாபர்மேன், கிரேடன் பொமரேனியன், காக்கர்ஸ் பேனியல், டால்மேஷன், பூடுல்ஸ், ராட்வீலர், பெல்ஜியம் ஷெப்பர்டு உள்ளிட்ட வெளிநாட்டு இனங்களும் என 20-க்கும் மேற்பட்ட நாயினங்கள் பங்கேற்றன.
பாதுகாப்பு படை நாய்கள்:
சேலம் மாவட்ட காவல்துறை, சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த மோப்ப நாய்களும் போட்டியில் பங்கேற்றன. நாய்கள் உரிமையாளர்களின் கட்டளைக்கு கீழ் படிதல், சாகசம் நிகழ்த்துதல், மோப்ப சக்தி ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த அடிப்படையிலும் நாயின் உரிமையாளருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
செல்லப்பிராணிகள் போட்டி:
இதேபோன்று செல்லப்பிராணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் நாய்கள், குதிரை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் தங்களது உரிமையாளர்கள் கட்டளைக்கு ஏற்ப நடந்து கொண்டது. இதில் சிறந்த செல்லப்பிராணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மலர்க்கண்காட்சி நீட்டிப்பு:
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை மாலை முடிய இருந்த நிலையில், ஏற்காடு அண்ணா பூங்காவை அமைத்துள்ள மலர்க்கண்காட்சி மட்டும் 30ஆம் தேதி வரை (4 நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாளை மாலை 47வது ஏற்காடு கோடை விழா நிறைவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை, வனத்துறை என பல்வேறு துறைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளனர். மேலும், கோடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மலர் கண்காட்சி:
மலர் கண்காட்சியை ஒட்டி அண்ணா பூங்காவில் ஏழு லட்சம் மலர்களைக் கொண்டு காற்றாலை வடிவிலான மலர் அலங்கார வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்களான டால்பின், மீன், முத்துச்சிப்பி, ஆக்டோபஸ் என பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மலர் அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக, அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஏற்காடு ரோஜா என்றழைக்கப்படும் டேலியா மலர்கள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பூத்து குலுங்குகின்றன. மேலும் மேரி கோல்டு, டேலியா, வெர்பினா, பிளாக்ஸ் உள்ளிட்ட மலர் வகைகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இதனிடையே பல லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு நடைபெற்ற வரும் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.