Nainar Nagendran: ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்?
Nainar Nagendran: அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த நயினார் நாகேந்திரன், அதிமுக ஆட்சி காலத்தில் பவர்ஃபுல் துறைகளை தன் வசம் வைத்திருந்தார்.

எம்.ஜி.ஆரின் ரசிகர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என அறியப்பட்டு வந்த நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் தலைவராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த நயினார் நாகேந்திரன், அதிமுக ஆட்சி காலத்தில் பவர்ஃபுல் துறைகளை தன் வசம் வைத்திருந்தார். தமிழக பாஜக தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
புதிய தலைவருடன் தேர்தலை எதிர்கொள்ளும் பாஜக:
திமுக தொடங்கி பாமக வரை, பாஜக தொடங்கி விசிக வரை அனைத்து கட்சிகளும், அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணி, வியூகம் என அனைத்து விதத்திலும் திமுக தயாராகி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்க பாஜக மேலிடம் முடிவு செய்தது.
இருப்பினும், பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது, அதற்கு விடை கிடைத்துவிட்டது. பாஜக மாநில தலைவர் பதவிக்கான ரேஸ் தொடங்கியதில் இருந்தே ஒரு பெயர் மட்டும் தொடர்ந்து அடிபட்டுவந்தது.
யார் இந்த நயினார் நாகேந்திரன்?
அதுதான், நயினார் நாகேந்திரன். தற்போது, தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்ததன் மூலம் அவரே அடுத்த தலைவர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடும் போட்டிக்கு மத்தியில் அவரை தேர்வு செய்ய காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
நாகர்கோவிலில் உள்ள வைதீஸ்வரம் கிராமத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன், ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்து வந்தவர். இவரது அரசியல் பயணம், 1980களில் தொடங்கியது. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால் அதிமுகவில் இணைந்தார். கட்சி இரண்டாக உடைந்தபோது, ஜெயலலிதா அணியில் இணைந்தார்.
முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இவர், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கருப்பசாமி பாண்டியனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். பின்னர், 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் வெற்றி வாகை சூடினார்.
சாதி கடந்த ஆதரவு:
கடந்த 2001ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன், யாரும் எதிர்பார்க்காத வகையில் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக உருவெடுத்த அவர், மின்சாரம், தொழில்துறை மற்றும் போக்குவரத்துத்துறை என முக்கிய துறைகளை கவனித்து வந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு, 606 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு, மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றபோதிலும், எந்த ஜெயலலிதாவால் அரசியலில் உச்சம் தொட்டாரோ அதே ஜெயலலிதாவால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.
அதற்கு முக்கிய காரணம், உள்ளூரில் திமுக நிர்வாகிகளுடன் இணக்கமாகவே செய்லபட்டுவந்தார். என்னதான், அரசியலில் உச்சம் தொட்டாலும், தனது தொழிலை விட்டுவிடவில்லை. திமுக தலைவர்கள் உடனான இணக்கம் காரணமாக ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் என தொடர்ந்து தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். இதன் காரணமாகவே, நயினாருக்கு கொடுத்த வந்த முக்கியத்துவத்தை ஜெயலலிதா குறைக்க தொடங்கினார்.
பின்னர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பாஜகவில் இணைந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து, பாஜக சட்டமன்ற குழு தலைவராக செயல்பட்டு வந்தார். தொகுதியில் மக்கள் உடனான இணக்கம் காரணமாக செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்த அவருக்கு தற்போது பாஜக மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சாதி கடந்து அனைத்து சமுதாய மக்களாலும் ஏற்று கொள்பவராக உள்ளார்.