TVK Vijay: ஸ்பீடு ஏத்து மாமே.. இந்த வேகம் பத்தாது விஜய் சார்.. தீவிர அரசியலை கொஞ்சம் தீவிரமா பண்ணுங்க!
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிர அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கடசியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர். இந்த தேர்தலில் அனைவரது எதிர்பார்ப்பையும் தன் பக்கம் திருப்பியிருப்பவர் நடிகர் விஜய்.
விஜய் எனும் புகழ் வெளிச்சம்:
கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கொண்டுள்ள விஜய் கட்சி அறிவிப்பை வெளியிட்ட பிறகு பரபரப்பு அரசியலை மேற்கொள்வார் என்றே எதிர்பார்த்தனர். ஆனால், அனைத்து விஷயங்களுக்கும் எதிர்வினையாற்றால் சில விஷயங்களுக்கு மட்டுமே கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். அதற்கு அவர் படப்பிடிப்பு பணிகளில் தீவிரமாக இருப்பதே அதற்கு காரணம் என்று விளக்கம் அளித்தனர்.

தற்போது அவரது கடைசி படத்தின் பணிகளும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு கவனித்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலம் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. சீமான், திருமாவளவன் என விஜய் போட்ட கூட்டணி கணக்கு முற்றிலும் உடைந்துள்ளது. விஜய் என்னை திரையுலக புகழை மட்டுமே நம்பி தவெக களத்தில் குதிக்க உள்ளது.
கண்டனத்திற்கு பிறகு குரல்:
பலமிகுந்த திமுக கூட்டணி, மறுமுனையில் அதிமுக கூட்டணி ஆகியோரை எதிர்த்து தினசரி தீவிரமாக களப்பணியாற்றினால் மட்டுமே தவெக-வால் போராட முடியும். ஆனால், சமூக வலைதளங்களில் மட்டுமே தவெக தீவிரமாக உள்ளது. அதுவும் அந்த கட்சியின் தொண்டர்கள்.
டெல்லியில் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது செய்யப்பட்டதும் தனது கண்டனத்தை விஜய் பதிவு செய்தார். உடனடியாக 10 நாட்களாக கொட்டும் மழையிலும் போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்காக இதுவரை ஒரு குரல் கொடுக்காத நடிகர் விஜய் ராகுல் காந்திக்காக மட்டும் கூட்டணிக்காக குரல் கொடுக்கிறார் என்று கண்டனங்கள் எழுந்தவுடன் உடனடியாக தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக குரல கொடுக்கிறார்.
வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்:
மதுரையில் விஜய் நடத்த உள்ள தவெக மாநாட்டிற்கு பிறகும் விஜய் மென்மையான அரசியல் போக்கை மேற்கொண்டு வந்தால் அவர் எதிர்பார்த்த வாக்குகளை விட குறைவாகவே வாக்குகள் வாங்குவார்.

மக்கள் சந்திப்பு, தீவிர களப்பணி, தினசரி தீவிர அரசியல் என கவனமாகவும், தீவிரமாகவும் விஜய் பணியாற்றினால் மட்டுமே நடிகர் விஜய்யால் தேர்தலில் ஜொலிக்க இயலும். அதற்கு விஜய் தனது வேகத்தை முழுவீச்சில் இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
அடுத்த 10 மாதம்தான்:
ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பு வெளியாவதால் அதன் தாக்கம் மக்கள் மத்தியில் இருக்கும் என்று விஜய் கணக்கிட்டால் அது நிச்சயமாக கைகொடுக்காது. படத்தின் வெற்றிகள் தேர்தலில் எதிரொலித்தது எம்ஜிஆர் காலத்துடன் தமிழ்நாட்டில் நிறைவடைந்துவிட்டது.
அடுத்த 10 மாதத்தில் விஜய் மக்களுடன் மக்களாக இணைந்து களத்தில் தீவிரப் பணியாற்றாமல் இருந்தால், கட்சி தொடங்கி தோல்வியைத் தழுவிய மற்ற நடிகர்களின் வரிசையில் விஜய்யும் ஒரு ஆளாகவே இணைய வேண்டிய சூழல் உண்டாகும்.





















