CM MK Stalin Meets Pinarayi: கேரள முதல்வருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு! பரிசாக 'திராவிட மாடல்' புத்தகம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளவிற்கு சென்றுள்ளார்.
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்றுள்ளார். இன்று இவர் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை கோவளத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு திராவிட மாடல் புத்தக்கத்தை பரிசாக வழங்கினார்.
இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நல பயக்கும் திட்டங்கள் தொடர்பான அறிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வரிடம் வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சருடன் தமிழக தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்,மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் திரு.@pinarayivijayan அவர்களை சந்தித்து,இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார்#CMMKSTALIN | #TNDIPR | pic.twitter.com/BPfrA4uyVy
— TN DIPR (@TNDIPRNEWS) September 2, 2022
மேலும் இந்தச் சந்திப்பின் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற உள்ளது. இது தென் மண்டல் கவுன்சிலின் 30வது கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
மேலும் படிக்க:அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் முக்கிய சாராம்சங்கள் என்னென்ன தெரியுமா..?
மண்டல கவுன்சில் கூட்டம்:
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1956ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம் மாநிலங்கள் மண்டலங்களாக வகுக்கப்பட்டு ஒரு கவுன்சில் அமைக்கப்பட்டது. அந்த அனைத்து கவுன்சில்களுக்கும் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் செயல்படுவார். அவருடைய தலைமையில் அவ்வப்போது இந்த கவுன்சில் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தென் மண்டல கவுன்சிலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சதீவுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்களுடன் அம்மாநில தலைமை செயலாளர்கள் பங்கேற்பது வழக்கம். மண்டல கவுன்சில் கூட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். அத்துடன் மாநிலங்களுக்கு பொதுவாக உள்ள சில விஷயங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும். மேலும் இந்தக் கூட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையே நல்லிக்கணம் அமையும் வகையில் கருத்துகள் பரிமாறப்படுவது வழக்கம். அந்தவகையில் நாளை திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சிலின் 30வது கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று கேரளாவில் நடைபெற்ற விழாவில் இந்திய கப்பல் படைக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்.எஸ் விக்ராந்த் கப்பல் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அத்துட்ன அவர் மலையாளத்தில் சில வார்த்தைகளில் உரையாற்றினார்.
மேலும் படிக்க: அதிமுக பொதுக்குழு வழக்கு...எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு! மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ்