வேண்டுதல் நிறைவேறி ஸ்டாலின் முதல்வரானார்; ராமசுப்பிரமணியன் புகழாரம்!
ஸ்டாலின் எப்போதும் முக மலர்ச்சியோடு, நம்பிக்கையோடு மக்களை அணுகும் பாங்கு தான், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என மக்களை உணரவைத்தது. நானும் அதை உணர்ந்தேன்.
‘என்னை முதல் மனிதனாக அழைத்து, மிகுந்த வாஞ்சையுடன் நலம் விசாரித்து, அன்பைப் பொழிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாண்பில் மயங்கிக் கரைந்து போனேன். மிக உன்னதமான தலைவர் அவர்’ என வலதுசாரி ஆதரவாளர் ராமசுப்பிரமணியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து ராமசூப்பிரமணியன் ஏபிபி நாடு செய்திக்கு பகிர்ந்துள்ளார். அதில்,
அன்பினில் நனைந்தேன்
கருணாநிதி மறைவுக்குப் பிறகு அவருடைய பூத உடல் நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் அனுமதி மறுக்கப்பட்டதும், திமுக தலைவர் ஸ்டாலின் அடைந்த வேதனை, பிறகு நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்ததும் துக்கம் நீங்கி மகிழ்ச்சியுடன் உணர்ச்சி பொங்க, வெடித்து சிதறி கண்ணீர் விட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்ததும் என் மனம் உருகிப்போய்விட்டது.
அந்த நேரத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்க தொடங்கினேன். திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை ஒருங்கிணைத்து, கூட்டணிக் கட்சிகளையும் அரவணைத்து 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதும் இந்திய துணைக்கண்டமே தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவர் ஸ்டாலின் என்றும் அகில இந்திய அரசியலில் அவரின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றும் கொண்டாடியது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கிராமம் கிராமமாகச் சுற்றுப்பயணம், மக்கள் குறைகள் என்னென்ன? அவைகளை தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் தீர்ப்பேன் என உறுதி அளித்தது போன்றவை என்னை அவர்பால் பெரிதும் ஈர்த்தது.
கறுப்பர் கூட்டம் எனும் மக்கள் விரோத சிறுகூட்டம், இந்து மதத்தையும், கந்த சஷ்டி கவசத்தையும் மிக மோசமாக வர்ணித்ததும், அதைக் கண்டித்த முதல் கட்சியாக திமுகதான் இருந்தது. அக்கட்சியின் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கட்சியின் சார்பாக கறுப்பர் கூட்டத்தைக் கடுமையாக கண்டித்தார்.
ஆனால், தமிழக பாஜக, கறுப்பர் கூட்டத்தைத் தூண்டியது திமுகதான் என பொய்யான பரப்புரை மேற்கொண்டபோது அதைக் கடுமையாகச் சாடி பல பேட்டிகளை கொடுத்தேன்.
அதேபோல், தமிழ்நாட்டில் மத கலவரங்கள் உண்டாகும் வகையில் வேல்யாத்திரை என்ற பெயரில் ”திமுக இந்து விரோத கட்சி” என்ற மிகப்பெரும் பரப்புரையை பாஜக மேற்கொண்டவுடன், அதன் பொய்த்தன்மையை மக்கள் புரிந்துகொண்டு, பாஜகவின் பொய்பிரசாரத்தை புறந்தள்ளுங்கள் என்றும் பல பேட்டுகள் கொடுத்தேன்
திமுகவோ, மு.க.ஸ்டாலினோ - இந்து மதத்துக்கு எதிராக ஒரு சொல் கூட சொல்லவில்லை. அதனால் நான் அவருக்கு ஆதரவாக பேட்டிகள் அளிக்க தொடங்கினேன். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் திமுக தலைவர் ஸ்டாலினின் உயர்ந்த பண்பும், எல்லா துறைகளிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற நினைக்கும் அவரின் எண்ணமும், அவரின் அயரா உழைப்பும்தான். கொரோனா பெருந்தொற்று மக்களைப் பாதித்ததும் தானும் தனது கட்சி சகாக்களையும் இணைத்து, உயிரையும் துச்சமென எண்ணி மக்கள் பணி செய்தது கண்டு வியந்துபோனேன்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், தமிழக நலனே பிரதான கொள்கையெனக் கொண்டிருந்ததைக் கண்கூடாகக் கண்டேன். இந்நிலையில், திருச்சியில் திமுக மாநாட்டில், “விஷன் டாக்குமெண்ட்” எனும் பத்து வருடத் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு மற்றும் தேர்தல் அறிக்கை ஆகியவை என்னை வெகுவாகக் கவர்ந்தன. மு.க.ஸ்டாலின் எப்போதும் முக மலர்ச்சியோடு, நம்பிக்கையோடு மக்களை அணுகும் பாங்கு இவையே, தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என தமிழக மக்களை உணரவைத்தது. நானும் அதை உணர்ந்தேன்.
அவரை நேராக அணுகி, “அவரும் அவர் கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெறும், கூட்டணி கட்சிகளும் பெருவெற்றி பெறுவர், அடுத்துதான் திமுகதான் ஆட்சிக்கட்டிலில் அமரும்” என வாழ்த்தினேன். அவர் என்னை வரவேற்றப் பாங்கும், அன்புடன் அகமும் முகமும் மலர பேசிய விதமும் நான் உண்மையில் மயங்கியே போனேன்.
நானே ஒரு அந்தணன், திமுக உறுப்பினர்கூட அல்ல, ஆனாலும் அவரின் அன்பும் இன்முக வரவேற்பும் என்னை மிகவும் கவர்ந்தது. திமுக வெற்றி பெற வேண்டும், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என உளமாற இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். அதற்கேற்ப, தேர்தல் முடிவுகளும் அமைந்தன.
தமிழக மக்கள் மிகச்சிறந்த வெற்றி பரிசை திமுகவுக்கு கொடுத்து, மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதல்வராக்கியுள்ளனர். கொரோனா ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதும், இரண்டு நாட்களுக்கு முன்பாக அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். சுமார் 25 பேர் அவரைப் பார்க்க அனுமதி பெற்று அமர்ந்து கொண்டிருந்த நிலையில், என்னை முதல் மனிதனாக அழைத்து, மிகுந்த வாஞ்சையுடன் நலம் விசாரித்து, அன்பைப் பொழிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாண்பில் மயங்கிக் கரைந்து போனேன். மிக உன்னதமான தலைவர் அவர்.
அவரிடம் முதல்வர் பொது நிவாரண நிதியாக சிறு தொகையை அளித்து மகிழ்ந்தேன். அவரே புகைப்படம் எடுக்க உத்தரவிட்டதும் என் மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவே இல்லை. அவரை மனமார வாழ்த்தி, இறைவன் அருளால் பல்லாண்டுகள் முதல்வராக இருக்கவும், திமுகவே பலபல ஆண்டுகள் ஆட்சியில் இருக்கவும் மனதார பிரார்த்தனை செய்வதாகக் கூறி விடைபெற்றேன். நான் வரும் வழியெல்லாம் என் மனதில் ஓடியது, முதல்வரின் அன்பான வரவேற்பும் கனிவான பேச்சும் உளப்பூர்வமாக மகிழ்ச்சியும் தான். இப்போதும்கூட என்மனதில் அந்த நினைவுகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.உண்மையான அன்புள்ளம் கொண்ட சகோதரப்பாசத்தில் நனைந்ததில் இப்போதும் உணர்ந்து மகிழ்ந்து அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். வாழ்த்துகள் ஸ்டாலின்! இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.