ஏனாம் சுயேட்சை எம்எல்ஏவுக்கு முன்னாள் அமைச்சர் தொல்லை - அதிமுக வையாபுரி மணிகண்டன் கண்டனம்
புதுச்சேரி : ஏனாம் சுயேட்சை எம்.எல்.ஏ.வுக்கு முன்னாள் அமைச்சர் தொல்லை - அதிமுக வையாபுரி மணிகண்டன் கண்டனம்
புதுச்சேரி: ஏனாம் சுயேட்சை எம்.எல்.ஏ.வுக்கு முன்னாள் அமைச்சர் தொல்லை கொடுப்பதாக அதிமுக வையாபுரி மணிகண்டன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏனாம் பிராந்தியத்தில் தோல்வியை தழுவிய முதலமைச்சர், முன்னாள் அமைச்சருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை வழங்கினார். முதலமைச்சரால் வழங்கப்பட்ட பதவியை வைத்துக் கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு எல்லாவிதத்திலும் முன்னாள் அமைச்சர் தொல்லை கொடுத்து வருகிறார். முதலமைச்சர் அளித்த பதவி மாநிலத்தை வளர்ச்சி பெற செய்ய வழங்கப்பட்டது அல்ல, சுயேச்சை எம்.எல்.ஏ.வின் அடிப்படை உரிமைகளை குழிதோண்டி புதைப்பதற்குத்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. ஒரே மேடையில் எம்.எல்.ஏ.வை வைத்துக் கொண்டே, முன்னாள் அமைச்சர் மூலம் பயனாளிகளுக்கு ஆணையை வழங்க வைத்துள்ளார். இதை தன்மானம் உள்ள எவரும் தட்டிக்கேட்பது நியாயமான ஒன்று.
சுயேச்சை எம்.எல்.ஏ தனது உரிமை கண்முன்னே பறிக்கப்படுவதை கண்டு வேதனைப்பட்டு, வெளியேறியுள்ளார். இந்த காட்சியை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டாரா, இதே நிலையை இன்னாள் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சராக ஆகும்போது ஏற்றுக்கொள்வாரா? முதலமைச்சரின் சர்வாதிகார செயல்பாடை தட்டிக்கேட்காமல், கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மவுனம் காப்பது உங்கள் உரிமையை மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமையையும் பறிக்கும் செயல் என்பதை நினைவூட்டுகிறேன். பா.ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.வுக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலை புதுவை மாநில மக்கள், பா.ஜனதா கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளது. நாகரீகமற்ற இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை ஆளுநர் தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்தி, புதுவையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு வாரிய தலைவர் பதவிகளை வழங்கலாம். இதேநிலை இன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வருகிற காலத்தில் ஏற்படலாம் என வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்