Durai Vaiko: இந்தியா கூட்டணியில் இவர்தான் பிரதமர் வேட்பாளர்: பற்றவைத்த துரை வைகோ!
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் ராகுல் காந்தி பிரதமர் என்பது மாற்று கருத்து கிடையாது
தூத்துக்குடியில் மதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறுகையில், ''ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீச்சு சம்பவம் தவறான சம்பவம் கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அதற்காக வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதரீதியாக, ஜாதி ரீதியாக சர்ச்சைகள் கிளம்பும்போது தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சில இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு சில சம்பவங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளை மதிக்கவில்லை என்று கூறுவது தவறானது. ஆளுநர் தனது சட்டசபை உரையில் காமராஜர் பெயரை கூட விட்டுவிட்டார்.
சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை. ஆளுநர் காமராஜர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா ஆகியோருக்கு வழங்க வேண்டிய மரியாதையை கொடுக்கவில்லை.
தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு கொடி பிடித்தவர் யார்? அந்த மாதிரி இயக்கங்களுக்கு ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு சுதந்திரப் போராட்டத்தை பற்றியோ சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றியோ கூறுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல் இப்படித்தான் இருக்கிறது. இவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள். ஆளுநர் ஆக பதவியேற்பதற்கு முன்பாக வகுப்பு எடுக்கிறார்களோ என நினைக்க தோன்றுகிறது. மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் உள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். ராகுல் காந்தி பிரதமதில் என்பது மாற்று கருத்து கிடையாது. இந்தியா கூட்டணியின் இலக்கு யார் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல, யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான்.
எங்களது இயக்கம் சார்பில் ராகுல் காந்தியைத்தான் பிரதமராக கூறுவோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்ற தமிழர் பிரதமர் ஆனால் எல்லோரும் சந்தோஷப்பட வேண்டும். ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் இல்லை. இப்போது வட மாநில இயக்கங்களின் சர்ச்சையை தீர்ப்பதற்குத்தான் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
அண்ணாமலை நல்ல அதிகாரியாக செயல்பட்டார். நன்றாக இருந்தார். ஆனால் தவறான சித்தாந்தத்திற்காக, இயக்கத்திற்காக அவரது உழைப்பு வீணாகி கொண்டிருக்கிறது. அவர் தற்போது தவறான இயக்கத்தில் சேர்ந்து உள்ளார். அண்ணாமலை போன்ற தலைவர்களை மூளைச் சலவை செய்து அவரை தவறான வழிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.