’பொதுக்குழுவுக்கு தடைகோர தனி நீதிபதியை அணுகலாம்’ - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி தனி நீதிபதியை அணுகுமாறு ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஒத்தி வைக்குமாறு முன்னதாக ஓபிஎஸ் வைத்த கோரிக்கையை ஏற்று ஜூலை 7-ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (ஜூலை.04) விசாரணைக்கு வந்தது.
தனி நீதிபதியை அணுகுங்கள்
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் தொடர்பாக மட்டுமே இந்த அமர்வில் விசாரிக்க வேண்டும் என்றும், வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் கூட்டம் தொடர்பாக நீதிமன்றம் தலையிடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி தனி நீதிபதியை அணுகுமாறு ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஈபிஎஸ் தரப்பு வாதம்
முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது.
இந்நிலையில் பழைய உத்தரவு பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை கோரி மேல் முறையீட்டு வழக்கில் கோரிக்கை வைக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட பழைய உத்தரவுகள் அனைத்தும் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மீண்டும் பொதுச் செயலாளர் பதவி
வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுவில் அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
பொதுக்குழு அன்று அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படவுள்ளதாக நேற்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்
ஒற்றைத் தலைமை போட்டி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர மற்ற எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.