ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அது அதிபர் ஆட்சியை நோக்கி பயணிக்கும் திட்டம் - ஈஸ்வரன்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கட்சியின் பொதுச்செயலாளரும்,எம்.எல்.ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சியை நோக்கி செல்கின்றது என்றும், அண்ணாமலை சொல்வதை மிரட்டும் தொனியில் கூறுவதை எந்த ஒரு அரசியல் கட்சியினரும் ஏற்றுக்கொள்ள வகையில் அல்ல என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கரூரில் அதிரடி பேட்டியளித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இக்கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்.ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடங்கவில்லை. ஒரு சில ஊடகங்களில் வரும் செய்தியில் உண்மை கிடையாது. ஆகவே எங்கள் கட்சியின் பொதுக்குழு அதனை தீர்மானிக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அது அதிபர் ஆட்சியை நோக்கி பயணிக்கும் திட்டம், ஆகவே அது நம்முடைய நாட்டில் ஒத்துவராது.
அது இப்போதைக்கு நடைமுறை சாத்தியம் அல்ல. அதே போல, காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றது. கடந்த 2014ம் ஆண்டே பாரத பிரதமர் தேர்தலின் வாக்குறுதியில், கங்கையும், காவிரியும் இணைக்கப்படும் என்று சொன்னார். ஆனால் இன்றுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. 2019 ல் கோதாவரியை கொண்டு வந்து இணைப்போம் என்று சொன்னார். ஆனால் அதுவும் இணைக்கப்படவில்லை, ஆகவே 2024ம் ஆண்டான இந்த வருட தேர்தலில் எதை இணைப்போம் என்று சொல்லப்போகின்றார்களோ? தெரியவில்லை, ஆகவே பாஜக தலைவர்கள் அதை பற்றி பேச மறுக்கின்றனர்” என்றார்.
தொடர்ந்து திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அடிக்கடி அண்ணாமலை கூறிவருவது குறித்து கேள்வி எழுப்பிய போது, ஊழல் செய்தவர்கள் விசாரணை வளையத்திற்குள் வரலாம், அதில் உண்மை இருந்தால் தண்டனையும் பெறலாம், அதில் எந்த வித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், உள்நோக்கத்துடனும், மிரட்டும் தொனியில் கூறிவருவது தான் யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவ்வப்போது உள்நோக்கத்துடன் மிரட்டுகின்ற தொனியில் எந்த ஒரு கட்சியினரும் பேசியது கிடையாது. ஆனால், அண்ணாமலை அப்படித்தான் தொடர்ந்து பேசி வருகின்றார் என்றார். மேலும், கள் இறக்குவது ஒன்று தான் விவசாயிகளின் வருமானத்தினை இரட்டிப்பாக்கும், ஆகவே கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.