முத்துவேல் கருணாநிதியாகிய அவர்... பெண்ணினத்தின் காவலர் ஏன்?
அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தேர்தல் அறிக்கையில் பார்த்துப் பார்த்து வடிவமைப்பது மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்ந்த அறிவிப்புகள். ஆனால், அதற்கு 1989-ம் ஆண்டு வித்திட்டவர் கருணாநிதி.
1969 பிப்ரவரி 10-ல் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மு.கருணாநிதி.
ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றுதொட்டே முத்துவேல் கருணாநிதியாகிய அவர், மகளிர் நலன் காக்க அவர் 360 டிகிரியில் நலத்திட்டங்களை அறிவித்து மகளிரின் காவலராக இருந்து வந்திருக்கிறார்.
பெண்களின் கல்வி உரிமை, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, திருமண உதவித் திட்டங்கள், மகப்பேறு நலத் திட்டங்கள், கணவனை இழந்தப் பெண்கள், மூதாட்டிகளுக்கு நிதியுதவி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் முதல்வர் கருணாநிதியின் உதவி பெண்களுக்குப் பெரு விடுதலையாக இருந்திருக்கிறது.
கல்விக்கண் திறந்த கருணாநிதி..
அப்போதைய காலகட்டத்தில் பெண் கல்வி என்பது தேவையற்ற செலவாகவே பார்க்கப்பட்டது. இதனால், சிறு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பதும், தொடர்ச்சியாக இளம் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, ஊட்டச்சத்து குறைபாடுடன் குழந்தை பிறப்பு என அடுக்கடுக்காக சமூகப் பிரச்சினைகள் எழுந்தன. இந்நிலையில் தான், மூவலூர் ராமாமிர்த அம்மையார் திருமண உதவித்திட்டத்தை கருணாநிதி அறிவித்தார்.
பெண்கள் குறைந்த பட்ச கல்வியாவது கற்க வேண்டும் என்ற நோக்கிலும் 8 -ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டத்தை ஏற்படுத்தினார். பின்னர் இத்திட்டத்தின் பலனை அடைய குறைந்த பட்சம் 12வது வரை படித்திருக்கவேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது. இதனால் 12ம் வகுப்பு வரையிலுமே பெண் கல்வி உறுதியானது.
கல்லூரியில் படிக்கச் செலவு அதிகம் என்ற காரணத்தால் பெண்களைப் படிக்க வைக்கத் தயங்கிய காலகட்டத்தில், மகளிருக்கான இலவச பட்டப்படிப்பு திட்டம் மூலம் பெண் கல்வியை மேம்படுத்தினார்.
சரி பெண்கள் படிக்க வந்தாயிற்றே என்று மகிழ்ந்த அவருக்கு அது எல்லா சமூகத்தையும் எட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகையால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தனிப் பள்ளிகளும் விடுதிகளும் அரசால் நடத்தப்படுவது போல இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்காக 5 விடுதிகள் கட்டப்பட்டது. அது இஸ்லாமிய மாணவிகளும் கல்வி கற்கும் சூழல் எளிதாகியது.
திருமண உதவித் திட்டங்கள்..
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதி உதவி திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம் என பல்வேறு திருமண உதவித் திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12940 ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
முதன்முதலாக...
இந்தியாவிலேயே முதன்முறையாக, காவல்துறையில் மகளிரை பணிநியமனம் செய்யும்முறை அமுல்படுத்தினார் கருணாநிதி. அதேபோல், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முதல்முறையாக, திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும். என சட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை முற்றிலும் பெண்கள் ஆசிரியையாக நியமிக்க வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசு பதவிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான்.
சொத்து உரிமை..
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் ஆட்சி செய்தவர் என்பதை நிரூபித்தவர் கருணாநிதி. 1929-ம் ஆண்டில் பெரியார், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரி தீர்மானம் நிறைவேற்றினர். அவர் வழி நின்ற கருணாநிதி 1990ல் அதனை சட்டமாகக் கொண்டு வந்தார். இன்று பெண்களுக்கும் சொத்தில் பங்குகொடுப்பது இயல்பானதாக இருக்க அவரே காரணம்.
மகப்பேறு உதவித் திட்டம்..
டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும், வருவாய் இழப்பினை சரிகட்டவும் கர்ப்பிணி பெண்களுக்கு 6000 ரூபாய் உதவி வழங்கப்பட்டது.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள்..
இப்போதைய அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தேர்தல் அறிக்கையில் பார்த்துப்பார்த்து வடிவமைப்பது மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்ந்த அறிவிப்புகள். ஆனால், அதற்கு 1989-ம் ஆண்டு வித்திட்டவர் கருணாநிதி. தருமபுரி மாவட்டத்தில் ஆதகம்பாடி எனும் ஊருக்கருகில் உள்ள காட்டுக்கொட்டகை எனுமிடத்தில் மாரியம்மன் மகளிர் மன்றம் எனும் பெயரில், மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை முதன் முதலாக தொடங்கிவைத்தார். சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மாணியமாக வழங்கப்பட்டது. இன்று, மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் நல்கும் ஊற்றாக உருவெடுத்துள்ளது.
மூதாட்டிகளுக்கும் உதவி..
கணவனை இழந்த பெண்களுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் முதியோர் உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்க உத்தரவிட்டவர் கருணாநிதி. இவையெல்லாம், பெண் விடுதலைக்கு கருணாநிதி கொண்டுவந்த சட்டத்திட்டங்களில் சில. அவர் அறிவித்த பெண்கள் நலத்திட்டங்களை இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.