‘செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்?’ ஆவணங்களை தயார் செய்த அமலாக்கத்துறை; ரெய்டுக்கு தயார்!
Anitha R. Radhakrishnan : ஏற்கனவே செந்தில்பாலாஜி, பொன்முடி என இரண்டு அமைச்சர்களை ரவுண்டு கட்டியுள்ள அமலாக்கத்துறை, இப்போது மூன்றாவதாக அனிதா ராதாகிருஷ்ணனை டார்கெட் செய்துள்ளது.
![‘செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்?’ ஆவணங்களை தயார் செய்த அமலாக்கத்துறை; ரெய்டுக்கு தயார்! Enforcement Department likely to raid TN Minister Anitha Radhakrishnan residence in Disproportionate Assets Case ‘செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்?’ ஆவணங்களை தயார் செய்த அமலாக்கத்துறை; ரெய்டுக்கு தயார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/e60ae63b53bb08afabfc45d6edacd9d61689751178965108_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி தமிழ்நாட்டையே பரபரப்பாக ஆக்கியுள்ள நிலையில், அடுத்ததாக மற்றொரு அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனை அமலாக்கத்துறை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி திமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திமுக தொடர்ந்த வழக்கால் திமுக அமைச்சருக்கு சிக்கல்
அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001-2006 ஆட்சி காலத்தில் வீட்டு வசதி துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வழக்கை தொடர்ந்து நடத்தி முடிக்க உத்தரவிட்டது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்து அவருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.
மேல்முறையீட்டில் குட்டு - மனுவை வாபஸ் வாங்கிய அனிதா
உயர்நீதிமன்றம் தன்னுடைய மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து திமுக ஆட்சிக்கு வந்து அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடைத்துறை அமைச்சர் ஆன பிறகு 2022ல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்தார். ஆனால், அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆட்சி மாறி அமைச்சர் ஆனதால் வழக்கில் சேகரித்த ஆதாரங்களும் ஆவணங்களும் பொய் என்று ஆகிவிடாது என்று கடுமையாக அர்ச்சித்தது. இதனையடுத்து தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு வழக்கை எதிர்கொள்வதாக அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள கூறி அமலாக்கத்துறை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் 90 சதவிகித விசாரணை நிறைவடைந்துவிட்ட நிலையில் இதில் இப்போது அமலாக்கத்துறையை புதிதாக சேர்க்கத் தேவையில்லை என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு தொடர்பாக தங்களிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தங்களை வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதடப்பட்டது.
அனிதா வீட்டில் விரைவில் ரெய்டு ? மாஸ்டர் பிளானில் ED
இது தொடர்பான வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், விசாரணையை நீதிபதி ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டார். இருப்பினும், வரும் காலங்களில் அமலாக்கத்துறையை சேர்க்க நீதிபதி அனுமதித்தால் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு புதிய சிக்கல் ஏற்படும். அதே நேரத்தில் அமலாக்கத்துறையை இப்போது சேர்க்க தேவையில்லை என்று நீதிபதி மறுத்துவிட்டாலும் கூட லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அவர் இல்லத்திலோ அல்லது அவர் தொடர்பான இடங்களிலோ விரைவில் சோதனை நடத்தவும் அவரை நேரில் ஆஜகராக சொல்லி சம்மன் அனுப்பவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே செந்தில்பாலாஜி, பொன்முடி என இரண்டு அமைச்சர்களை ரவுண்டு கட்டியுள்ள அமலாக்கத்துறை இப்போது மூன்றாவதாக அனிதா ராதாகிருஷ்ணனை டார்கெட் செய்துள்ளது. விரைவில் அவருக்கு நெருக்கடி ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)