மாநில அரசு வேலைகளுக்கும் இனி ஒரே தேர்வு - பா.ஜ.க. வாக்குறுதி
அரசு வேலை நியமனங்களில் மோசடி நடைபெறாமல் தடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான தேர்வு முறை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமித்ஷா, அம்மாநிலத்திற்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் அரசியல் படுகொலைகளை தடுக்க தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அரசு வேலை
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்த அவர், மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் மணல், நிலக்கரி மாஃபியாவை கட்டுப்படுத்த தனியாக ஒரு காவல் படை ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புருலியா மாவட்டத்தில் உள்நாட்டு விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும், அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்த அவர், பெண்களுக்கு தொடக்க கல்வி முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். அரசு வேலை நியமனங்களில் மோசடி நடைபெறாமல் தடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான தேர்வு முறை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஜாம்பவானாகிய திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரே பெயரில் சர்வதேச விருது ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலின் முக்கிய பேசுபொருளாக உள்ள சி.ஏ.ஏ. சட்டம் குறித்த பேசிய அவர், பா.ஜ.க. மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் கேபினட் கூட்டத்திலேயே அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மீனவரகளுக்கு 6 ஆயிரம்
விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்குகள் மூலம் நிதி உதவி வழங்கப்படும் என்கிற வாக்குறுதியும் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. எல்லை மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தின் எல்லைப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் எனவும் அமித்ஷா தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். மாநிலத்தின் முக்கிய பிரிவினரான மீனவர்களுக்கு ஆண்டு தோறும் 6,000 ரூபாய் வழங்கப்படும் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாய கல்வி கொண்டு வரப்படும் எனவும் அமித்ஷா தன்னுடைய உரையில் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுங்கட்சியான திரிணாமூல் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பா.ஜ.க.வும் வெளியிட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு பெண்கள் ஆதரவு இருப்பதாக கருதப்பட்டு வரும் நிலையில், பெண்களை மையப்படுத்தி பா.ஜ.க. தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.