ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க கோரி போராடிய பாஜகவினர் கைது
இதனை அறிந்த திமுகவினர் நியாய விலை கடை அருகே வந்து குவிந்ததால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கி வரும் நியாயவிலை கடையில் பிரதமர் மோடியின் உருவப் படத்தை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரின் உருவப்படத்தை நியாய விலை கடையில் வைப்பதற்கு உரிய அனுமதி இல்லாததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். நாட்டின் பிரதமரின் புகைப்படத்தை நியாயவிலைக் கடைகள் வைப்பதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என்று பாஜகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பாஜகவினர் கொண்டுவந்திருந்த "கரீப் கல்யாண் யோஜனா" பிரதமர் மோடி அறிவித்துள்ள திட்டங்களின் கீழ் மக்கள் எவ்வாறு பயனடைகின்றனர் என்பதை சுவரொட்டிகள் மூலம் தெரிவிக்க நியாயவிலைக் கடை சுவற்றில் சுவரொட்டிகளை ஒட்ட முயன்றனர். அதையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் நியாயவிலைக் கடை பெண் ஊழியரை கடைக்கு வெளியே அழைத்து அவரிடம் பிரதமர் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நியாய விலை பொருட்களை மக்களுக்குப் தெரியும் விதமாக நியாய விலை கடை பலகையில் எழுதுமாறு கூறினார். நியாயவிலைக் கடை பலகையில் ஊழியர் எழுதிய பின்னரும் பாஜகவினர் சுவரொட்டி ஒட்ட முயன்றனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சேலம் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, நாட்டின் பிரதமர் புகைப்படத்தை நியாயவிலை கடைகளில் கட்டாயம் இருக்க வேண்டும். முன்னாள் முதல்வர் மற்றும் தற்போதைய முதல்வர் புகைப்படங்கள் இருக்கும் நிலையில் மக்களுக்கு அதிக உதவிகளை செய்துவரும் பிரதமர் மோடியின் புகைப்படம் நியாயவிலை கடைகளில் இடம்பெறுவது எந்தவித தவறும் இல்லை என்றார். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுகுறித்து பேசப் போவதாகவும் அவர் கூறினார். மேலும் மத்திய அரசு வழங்கும் திட்டங்களை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனை அறிந்த திமுகவினர் நியாய விலை கடை அருகே வந்து குவிந்ததால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினரும், திமுகவினரும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நியாய விலைக் கடையின் முன்பாக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் அனுமதியின்றி பாஜகவினர் கூடியதால் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். அப்போது கைது செய்த பாஜகவினரை காவல்துறை வாகனத்தில் ஏற்றுபோது காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவினரும் அனுமதி இல்லாமல் கூறியுள்ளதால் அவர்களையும் கைது செய்யுமாறு காவல்துறையினர் பாஜகவினர் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.