"வாழத் தகுதியற்ற மாநிலமாக மேற்குவங்கம் மாறியுள்ளது", மாநிலங்களவையில் கதறி அழுத பாஜக எம்பி..
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விரைவில் கொண்டு வாருங்கள். அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். வாழ தகுதி இல்லாத இடமாக மேற்கு வங்க மாநிலம் மாறி வருகிறது.
ராம்புராட் கலவரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்பி ரூபா கங்குலி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாது ஷேக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பாது ஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனால், படுகாயம் அடைந்த பாது ஷேக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே பிர்பூம் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன.
ராம்பூரத் என்ற பகுதியில் நுழைந்த மர்மநபர்கள் அங்குள்ள 12 வீடுகளை வெளிப்புறமாக பூட்டி, வீடுகளுக்குள் எரிபொருளை ஊற்றி தீ வைத்தனர் எனச் சொல்லப்படுகிறது. இதனையறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்ற நிலையில், சம்பவ இடத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் உள்ளே சிக்கிக்கொண்டவர்களால் வெளியில் வர முடியவில்லை. இந்த கொடூர சம்பவத்தில் 10 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர். இதுகுறித்து மாநிலங்களவையில் பேசியபோது பாஜக எம்பி ரூபா கங்குலி கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"पश्चिम बंगाल के बीरभूम में 8 लोगों को जलाकर मार दिया गया। वहां लोगों को पुलिस पर भरोसा नहीं है। वहां आज लोग पलायन करने पर मजबूर हैं। पिछले 7 दिनों में बंगाल में 26 लोगों की राजनीतिक हत्याएं हुई हैं।"
— BJP (@BJP4India) March 25, 2022
बीरभूम की घटना पर वक्तव्य देते भावुक हुईं राज्यसभा सांसद श्रीमती @RoopaSpeaks। pic.twitter.com/IafrL1DqyJ
மேற்குவங்க வன்முறை சம்பவம் குறித்து விரிவாக பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விரைவில் கொண்டு வாருங்கள். அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். அங்கிருந்து மக்கள் வெளியேறுகிறார்கள். வாழ தகுதி இல்லாத இடமாக மேற்கு வங்க மாநிலம் மாறி வருகிறது. மேற்கு வங்கத்தில் மக்களால் தைரியமாக ஒரு கருத்தை பேச முடிவதில்லை. கொலையாளிகளை அரசே பாதுகாக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று மக்களை கொன்று குவிக்கும் அரசு வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை பார்த்ததில்லை. நாம் மனிதர்கள்தான், நாங்கள் ஒன்றும் கல் மனது கொண்டு அரசியலை செய்யவில்லை" என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார். இதற்கிடையே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சிபிஐ விசாரணக்கு அம்மாநில முதல்வர் மம்தா மறுப்பு தெரிவித்திருந்தார்.