"30 அடி உயர தொட்டியில் சிறுவன் ஏறினானா?" - காவல்துறையின் விளக்கத்தை சந்தேகித்த பூம்புகார் எம்.எல்.ஏ!
மயிலாடுதுறை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு விவகாரத்தில் உண்மை அறியும் குழு அமைக்க வேண்டும் என பூம்புகார் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னீர்வெளி கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல்புறத்தில் மனிதக் கழிவு கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முற்றிலும் பட்டியலின மக்கள் வசிக்கும் இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இத்தகைய அநாகரிகச் செயல் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வெளியிட்ட ஆரம்பக்கட்ட விளக்கம் தொடர்பாக சந்தேகம் தெரிவித்துள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்ததோடு, போதை ஆசாமிகளின் அத்துமீறலே இதற்குக் காரணம் என்றும், இது குறித்து உண்மை கண்டறியும் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவத்தின் பின்னணியும் காவல்துறையின் விளக்கமும்
பன்னீர்வெளி கிராமத்தில் உள்ள சுமார் 30 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் வழியாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம்போல குடிநீர் விநியோகத்திற்காக தொட்டியின் மேற்பகுதியை ஆய்வு செய்தபோது, அங்கு மனிதக் கழிவு இருப்பது கண்டறியப்பட்டு ஊராட்சி நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் காட்டுத்தீ போலப் பரவியதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அவசர இயற்கை உபாதைக்காக 30 அடி உயர நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினரின் இந்த விளக்கம் அப்பகுதி மக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
திமுக குழு நேரில் ஆய்வு மற்றும் மக்களிடம் விசாரணை
இந்நிலையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் பன்னீர்வெளி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சர்ச்சைக்குரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள இடத்தையும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் அவர்கள் விரிவாகப் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, கிராமத்தில் உள்ள வீடுகள் தோறும் நேரடியாகச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், அப்பகுதி பொதுமக்களிடம் இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அப்போது, அப்பகுதியில் நிலவும் சமூக விரோதச் செயல்கள் மற்றும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தங்களது வேதனைகளையும், அச்சத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.
போதை கலாச்சாரமும் சட்டமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டும்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், காவல்துறையின் அறிக்கையின்படி உயரமான தொட்டி மீது சிறுவன் ஏறினான் என்பது ஏற்புடையதாக இல்லை, பொதுமக்களிடம் நடத்திய விசாரணையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியானது இரவு நேரங்களில் கஞ்சா மற்றும் சாராயம் அருந்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருப்பது தெரியவந்துள்ளது. இப்பகுதியில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரமே இத்தகைய இழிவான செயலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றும், போதை தலைக்கேறிய நபர்களின் தலையீடு இதில் நிச்சயம் இருக்கக்கூடும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், 30 அடி உயரம் கொண்ட மிகவும் ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஒரு சிறுவன் அவசர தேவைக்காக ஏறி இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறை கூறுவது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.
உண்மை அறியும் குழு மற்றும் புதிய தொட்டி அமைக்க கோரிக்கை
இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வருவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்திய சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், காவல்துறையினரின் அவசரகதியான முடிவை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல்துறை உயர் அதிகாரிகளும் இணைந்து ஒரு சுதந்திரமான உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, இச்சம்பவம் குறித்து தீர விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், பன்னீர்வெளி கிராம மக்களின் சுகாதாரம் மற்றும் மனநிலையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள பழைய நீர்த்தேக்க தொட்டிக்குப் பதிலாக, அப்பகுதியில் உடனடியாகப் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இச்சம்பவத்தால் பன்னீர்வேலி கிராமத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருவதால், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























