"பாதுகாப்பு விதிக மீறல் மன்னிக்கப்படாது" - மயிலாடுதுறையில் ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் எச்சரிக்கை!
மயிலாடுதுறையில் பட்டாசு சில்லறை விற்பனை கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்பி சினேஹா பிரியா ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட மிகவும் பரபரப்பான வணிகப் பகுதியான பெரியக்கடைத் தெருவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மற்றும் சில்லறை பட்டாசு விற்பனைக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா ஆகியோர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
எதிர்வரும் தீபாவளித் திருநாளை பொதுமக்கள் எவ்வித விபத்துகளும் இன்றி பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையிலும், அரசு விதிகளின்படி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும் இந்த அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது கடைகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாகப் பார்வையிட்டனர்.
அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டமைப்பு விதிகள்
பட்டாசு விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்ட பின் பேசிய மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், அரசு நிர்ணயித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து வியாபாரிகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தார். அரசின் விதிகளின்படி, பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அனைத்தும் தனித்தனி கட்டிடங்களில் மட்டுமே இயங்க வேண்டும் என்றும், கான்கிரீட் கட்டிடங்களாலோ அல்லது பாதுகாப்பான உறுதியான மேல்கூறைகளாலோ மட்டுமே அவை கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் கடைக்கு வந்து செல்லக்கூடிய அணுகுசாலைகள் போதுமான அகலத்துடன் தடையின்றி இருக்க வேண்டும் என்பதோடு, எந்தவொரு அவசர காலச் சூழ்நிலையிலும் பொதுமக்கள் எளிதில் வெளியேறும் வகையில் இரண்டாவது அவசர கால வெளியேறும் வாசல் திறந்தவெளியை நோக்கி பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதை வியாபாரிகள் முன்கூட்டியே உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
பட்டாசு கடைகளில் எவ்வித விபத்துகளும் நேராமல் தவிர்க்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் கூட்டாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குறிப்பாக, மின் மீட்டர்கள் அனைத்தும் கடையின் வெளிப்புறத்தில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், மின்மாற்றிகளுக்கு அருகில் ஒருபோதும் பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் தெளிவுபடுத்தினார். பட்டாசு கடைகளுக்கு அருகாமையில் எளிதில் தீப்பற்றக்கூடிய மூலப்பொருட்களைக் கொண்ட ஹோட்டல்கள், எண்ணெய் கடைகள் அல்லது வேறுவிதமான வணிக நிறுவனங்கள் இருக்கக் கூடாது என்றும், கடைகளின் முன்பகுதியில் பந்தல்கள், ஓலைச் செட்டுகள் அல்லது தற்காலிக அமைப்புகள் எதையும் அமைக்கக் கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடைகளில் தீ விபத்துகளை உடனடியாகக் கட்டுப்படுத்த ஏதுவாக, தேவையான அளவு தண்ணீர் மற்றும் மணல் நிரப்பப்பட்ட வாளிகள், இருநூறு லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பீப்பாய்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளதா என ஒவ்வோர் கடையாகச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், உரிய தரத்திலான தீ அணைப்பான்கள் கடைகளில் இருப்பதை உறுதி செய்வதோடு, அவை சரியான முறையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
கடைகளின் முன்பகுதியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் 'புகைப்பிடித்தல் கூடாது' மற்றும் 'பட்டாசு கடைகளில் தீக்குச்சி, விளக்குகள் பயன்படுத்தக் கூடாது' போன்ற எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விபத்தில்லா தீபாவளியை நோக்கி மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்கள்
இந்த ஆய்வின் இறுதியாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மிக முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினர். தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட மேற்கண்ட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை எவரேனும் மீறி விதிகளை மீறி செயல்படுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பட்டாசு கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதோடு, அவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.
வியாபாரிகள் தங்களது வணிக லாபத்தை விட மக்களின் உயிரும் பாதுகாவுமே முக்கியம் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்தத் தீபாவளித் பண்டிகையை பொதுமக்கள் எத்தகைய அசம்பாவிதங்களும் இன்றி முற்றிலும் விபத்தில்லா பண்டிகையாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் தலையாய நோக்கம் என்பதால், இதற்கு அனைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறை வல்லுநர்கள் உடனிருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















