நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பாம்பு நஞ்சு கக்கியதாக பரவும் செய்தி உண்மையா? மருத்துவரின் அறிவியல் பூர்வ விளக்கம்..
இலங்கையில் நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பாம்பு விஷம் காரணமா? பழங்களில் பாம்பு விஷம் கக்குமா என்பது குறித்த மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார்.

மயிலாடுதுறை: நமது அண்டை நாடான இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தைச் சாப்பிட்ட 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் அருகில் இருந்த நாவல் மரத்திலிருந்து கீழே விழுந்த பழத்தை எடுத்துச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். உடனே களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்பின் விஷம் பட்ட பழத்தை உட்கொண்டதே இந்த திடீர் உயிரிழப்புக்குக் காரணம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்குப் பலரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், பழங்களில் பாம்பு விஷத்தைக் கக்குமா மற்றும் அதைச் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு மரணம் சம்பவிக்குமா என்பது குறித்த மருத்துவ மற்றும் அறிவியல் உண்மைகள் குறித்து சிவகங்கையை சேர்ந்த பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது முகநூல் பதிவின் வழியில் தெளிவுபடுத்தியுள்ளார். அதனை இங்கு விரிவாகக் காண்போம்.
பாம்புகளின் உணவு முறையும் நஞ்சின் தன்மையும்
பாம்புகள் தாவர உணவுகளையோ அல்லது பழங்களையோ உட்கொள்ளும் உயிரினங்கள் அல்ல. அவை முழுமையாக மாமிசத்தை மட்டுமே உண்டு வாழும் மாமிசப்பட்சினிகளாகும். தவளைகள், சிறிய பாலூட்டிகள், பறவைகள், மீன்கள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றை மட்டுமே செரிக்கும் வகையில் அவற்றின் ஜீரண மண்டலம் இயற்கையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, பாம்புகள் நாவல் பழத்தையோ அல்லது பிற பழங்களையோ உண்ண முற்படாது என்பதால், பழத்தில் பாம்பு வாய் வைத்தது என்ற கூற்றே தர்க்கரீதியாக தவறான ஒன்றாகும். ஒருவேளை பாம்பு தற்செயலாகத் தனது விஷத்தைப் பழத்தின் மீது சிந்தியிருந்தாலும் கூட, அதனால் மனிதர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்பில்லை.
பாம்பின் விஷம் என்பது புரதங்கள் மற்றும் பல்வேறு நொதிகள் அடங்கிய ஒரு கூட்டுக்கலவையாகும். அந்த நஞ்சு, விஷப்பற்கள் மூலம் இரத்த ஓட்டத்தில் நேரடியாகச் செலுத்தப்படும்போது மட்டுமே மனித உடலுக்குப் ஆபத்தை விளைவிக்கும். மாறாக, விஷத்தை வாய் வழியாக உட்கொள்ளும்போது, நமது இரைப்பையில் உள்ள வீரியமிக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம் அந்த நஞ்சினை முழுமையாகச் செரித்து வீரியமற்றதாக மாற்றிவிடும். வாயிலோ அல்லது தொண்டையிலோ காயம் அல்லது இரத்தப்போக்கு இருந்தால் மட்டுமே அது இரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது.
சிறுவனின் உயிரிழப்புக்கான மாற்றுச் சாத்தியக்கூறுகள்
எனவே, விஷம் ஏறிய பழத்தைச் சாப்பிட்டதால் சிறுவன் இறந்தான் என்பது அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பிரேதப் பரிசோதனை முடிவுகளே உண்மைக்கான காரணத்தை வெளிக்கொண்டு வரும் என்றபோதிலும், இந்த அசம்பாவிதத்திற்குப் பின்வரும் ஐந்து காரணங்கள் அடிப்படையாக இருந்திருக்கக் கூடும்.
* முதலாவதாக, நாவல் பழத்தைப் பறிக்க முற்பட்டபோதோ அல்லது கீழே கிடந்த பழத்தை எடுத்தபோதோ, அங்கு மறைந்திருந்த நாகப்பாம்பு போன்ற வீரியமிக்க நரம்பு மண்டலத்தைத் தாக்கும் பாம்பு சிறுவனைக் கடித்திருக்கலாம். சில நேரங்களில் பாம்பு கடித்த தடம் மிகச்சிறியதாக இருப்பதால் வெளியே தெரியாமல் போயிருக்கலாம். சிறுவனும் முள் தைத்ததாக நினைத்து அலட்சியப்படுத்தியதால், காலதாமதம் ஏற்பட்டு சுவாசத் தசைகள் செயலிழந்து மரணம் சம்பவித்திருக்க வாய்ப்புள்ளது.
* இரண்டாவதாக, மரத்திலிருந்த கொளவி அல்லது கட்டெறும்பு கடிப்பதன் மூலம் ஏற்படும் 'அனாபிலாக்ஸிஸ்' (Anaphylaxis) எனப்படும் தீவிர ஒவ்வாமை காரணமாக மூச்சுக்குழாய் சுருங்கி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.
* மூன்றாவதாக, மரத்திலிருந்து பழத்தைப் பறிக்க முயலும்போது கீழே விழுந்து தலையின் பின்புறத்திலோ அல்லது கழுத்துத் தண்டுவடத்திலோ பலத்த அடிபட்டு மூர்ச்சை அடைந்து இறந்திருக்கலாம்.
* நான்காவதாக, சிறுவனுக்கு ஏற்கனவே கண்டறியப்படாத இதய நோய்கள் ஏதேனும் இருந்து, அதன் தீவிரத்தால் மரணம் ஏற்பட்டிருக்கலாம்.
* ஐந்தாவதாக, சிறுவன் பழத்தை அவசரமாக விழுங்கும்போது அதன் கொட்டை மூச்சுக்குழாயில் அடைத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உண்டு.
காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்த மூடநம்பிக்கைகள்
பாம்புகள் பழங்களையோ காய்கறிகளையோ தீண்டும் என்பதும், அவற்றில் நஞ்சைக் கக்கும் என்பதும் சமூகத்தில் நிலவும் முற்றிலும் தவறான மூடநம்பிக்கையாகும். இதேபோல், வெள்ளரிக்காய் அல்லது புடலங்காய் திடீரெனக் கசப்பாக இருந்தால், "பாம்பு வாய் வைத்துவிட்டது" என்று கிராமப்புறங்களில் கூறுவது உண்டு.
உண்மையில், வெள்ளரி மற்றும் புடலை போன்றவை 'குக்குர்பிட்டேசியே' (Cucurbitaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். பிற உயிரினங்கள் தம்மை உண்ணாமல் தடுத்து, இனப்பெருக்கம் செய்வதற்காக இவை இயற்கையிலேயே 'குக்குர்பிட்டேசின்' (Cucurbitacin) எனும் கசப்புச் சுவையுடைய நச்சுப்பொருளைச் சுரக்கின்றன. அதிக வெயில், போதிய நீரின்மை மற்றும் மண்வளக் குறைபாடு போன்ற சூழல்களில் இந்த வேதிப்பொருள் அதிகமாகச் சுரப்பதால் காய்கறிகள் கசப்புத்தன்மை அடைகின்றன.
இவற்றை உண்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாமே தவிர, இதற்கும் பாம்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாம்புகள் தங்களுக்கு ஆபத்து வரும்போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், இரையை வீழ்த்தி உணவாக்கிக் கொள்ளவும் மட்டுமே தங்களின் நஞ்சைப் பயன்படுத்தும். மாறாக, தங்களின் உணவல்லாத பழங்கள் மற்றும் காய்கறிகளில் நஞ்சை வீணாக்காது என்பதால், பொதுமக்கள் இதுபோன்ற அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என சிவகங்கையை சேர்ந்த பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது முகநூல் பதிவின் வழியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















