இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளியை உள்ளிட்ட 48 பேர் இந்தாண்டு குண்டர் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜெகன் என்பவர் மீது காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
மயிலாடுதுறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீடூர், தென்பாதி தெருவைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் 29 வயதான மகன் ஜெகன். இவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தின் போக்கிரி சரித்திர பதிவேட்டில் இடம்பெற்று தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த நபராவார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி (05.08.2026) அன்று பொது இடம் ஒன்றில் கையில் கூர்மையான கத்தியை வைத்துக்கொண்டு, அவ்வழியாகச் சென்ற பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கூச்சலிட்டு, கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்துள்ளார்.
அந்நேரத்தில் அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மயிலாடுதுறை காவல் நிலைய உதவி ஆய்வாளர், ஜெகனின் இந்த சட்டவிரோத செயலை நேரில் கண்டு உடனடியாகத் தலையிட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, உதவி ஆய்வாளர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, எதிரி ஜெகனைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், உரிய நீதிமன்ற நடைமுறைகளுக்குப் பின் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவு
நீதிமன்றக் காவலில் ஜெகன் சிறையில் இருந்தபோதிலும், அவர் மீது ஏற்கனவே போக்கிரி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வந்ததும், அவர் தொடர்ந்து சமுதாய அமைதிக்கு அச்சுறுத்தலாகவும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதகமாகவும் நடந்து கொள்வது காவல் துறையினரின் தீவிர ஆய்வில் தெரியவந்தது. இதன் காரணத்தால், அவர் மீண்டும் வெளியே வந்தால் பொது அமைதிக்கு மேலும் பெரும் பங்கம் விளைவிக்கக்கூடும் என்பதை உணர்ந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா, எதிரி ஜெகன் மீது தடுப்பு காவல் சட்டமான குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு முறைப்படி பரிந்துரை செய்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை தீவிரமாகப் பரிசீலித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், எதிரி ஜெகனின் குற்றப் பின்னணி மற்றும் பொது பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, அவரைத் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில், மயிலாடுதுறை காவல் துறையினர் குற்றவாளி ஜெகனை (29) கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அங்கு அடைத்தனர்.
நடப்பாண்டில் 48 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்ட நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை சார்பில் தொடர்ச்சியான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் சீர்குலைக்கும் வகையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது. குறிப்பாக, கொலை குற்றச் சம்பவங்களில் நேரடியாக ஈடுபட்ட 5 நபர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 16 நபர்கள், சட்டவிரோத மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 9 நபர்கள், கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 15 நபர்கள், தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஒரு நபர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 2 நபர்கள் என மொத்தம் 48 நபர்கள் மீது நடப்பாண்டில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமூக விரோதிகளுக்கு எஸ்பி கடுமையான எச்சரிக்கை
மாவட்டம் முழுவதும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து நபர்களின் செயல்பாடுகளையும் காவல் துறையினர் மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தின் அமைதியைக் கெடுக்க முயலும் நபர்கள் மீது தயவுதாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா, மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா மற்றும் அரசு தடைசெய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள், சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் மீது தொடர்ந்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை சார்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















