மக்களே உஷார்! கரண்ட் ஷாக் விபத்துகளில் இருந்து தப்பிக்க மின்வாரியம் தரும் 12 சூப்பர் டிப்ஸ் இதுதான்..
வடகிழக்கு பருவமழை எச்சரிக்கையாக மயிலாடுதுறை மின் பகிர்மான கழகம் சார்பில் பொதுமக்களுக்கு மிக முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் அவசர கால எண்களையும் வெளியிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் ஷே.சாஹுல் ஹமீது வடகிழக்கு பருவமழையும் மின் பாதுகாப்பு அவசியமும் குறித்து அவசர செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த செய்திக்குறிப்பில் விவரம் பின்வருமாறு;
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பலத்த காற்று மற்றும் கனமழை எந்நேரமும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், எதிர்பாராத மின் விபத்துகளை முற்றிலுமாகத் தவிர்க்கும் வகையிலும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பல்வேறு முன்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, மின்சாரக் கசிவு மற்றும் மின்கம்பங்கள் சாய்வது போன்ற அசம்பாவிதங்களை எதிர்கொள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மின்வாரியம் தரப்பில் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களின் போது மின்சாரத்துறையுடன் முழுமையாக ஒத்துழைப்பு நல்கி பாதுகாப்பான முறையில் செயல்படுவது ஒவ்வொரு குடிமகனின் இன்றியமையாத கடமையாகும்.
மரம் மற்றும் மின் கம்பிகள் பாதுகாப்பு வழிமுறைகள்
பொதுமக்கள் மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் எக்காரணம் கொண்டும் மின்கம்பிகளை உரசும் மரங்களின் அருகே செல்லவோ அல்லது அவற்றின் அருகில் நிற்கவோ கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள். அதேபோல், கனமழையின் காரணமாக மின்கம்பங்களிலும் மின்சாரம் கசிவவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், மின்கம்பங்களுடன் துணி உலர்த்தும் கொடிகளை இணைப்பதோ அல்லது துணிகளைக் காயப்போடுவதோ கூடாது.
அதுமட்டுமின்றி, மின்பாதைகளுக்கு அருகில் இரும்பு பைப்புகள் மற்றும் இரும்பு கம்பிகளை எடுத்துச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். மின்பாதைகளுக்கு நேராக வீடுகள் கட்டுவது மற்றும் வீடுகளுக்கு அருகில் ஆபத்தான மரங்களை வளர்ப்பது போன்ற செயல்களைத் தவிர்ப்பது வருங்கால விபத்துகளைத் தடுத்து நிறுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஈரப்பதம் பாதுகாப்பு
மழைக் காலங்களில் வீடுகளில் ஈரமான கால் மற்றும் கைகளுடன் மின்சாதனப் பொருட்களை இயக்குவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இடி மற்றும் மின்னல் பலமாக தாக்கும் நேரங்களில் தொலைக்காட்சி பெட்டிகள், மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சுவிட்சுகள் மற்றும் பிளக்குகள் போன்ற மின்சாதனங்கள் அனைத்தும் சிறு குழந்தைகள் எட்டாத உயரத்தில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வீடுகளில் மின் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு ஈ.எல்.சி.பி எனப்படும் மின்கசிவு தடுப்பான்களைக் கட்டாயமாகப் பயன்படுத்தி பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொது இடங்கள் மற்றும் கால்நடை பாதுகாப்பு முறைகள்
மழைக் காலங்களில் பொது மக்கள் யாரும் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், புதைவடங்கள் மற்றும் மின்வாரிய இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் மின்கம்பங்களிலோ அல்லது அவற்றை தாங்கும் இழுவை கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டுவது கூடாது. மேலும், பொதுமக்கள் எவரும் மின்கம்பங்களை எவ்வித பந்தல்களாகவும் அல்லது தற்காலிக அமைப்புகளாகவும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள். மின்வாரிய மின்கம்பிகளுக்கு இடையூறாக ஏதேனும் மரக்கிளைகள் இருந்தால், பொதுமக்கள் தாங்களாகவே அவற்றை வெட்ட முயலாமல், உடனடியாக மின்வாரிய அலுவலர்களை அணுகி முறையான அனுமதி மற்றும் உதவியைப் பெற வேண்டும்.
அவசர கால உதவி மற்றும் தொடர்பு எண்கள்
மயிலாடுதுறை கோட்டத்தில் மின்சாரம் தொடர்பான எத்தகைய புகார்களையும் பொதுமக்கள் உடனடியாகத் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரமும் முழுமையாகச் செயல்படும் 'மின்னகம்' அலைபேசி எண் 9498794987 மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். மேலும், மின்கசிவு, மின்தடை மற்றும் அறுந்து விழுந்த மின்கம்பிகள் போன்ற உடனடி அவசர கால உதவிகளுக்கு மயிலாடுதுறை நகர் மேற்கு பகுதிக்கு 9445854035 மற்றும் 9445854036 ஆகிய எண்களிலும், நகர் கிழக்கு பகுதிக்கு 9445854037 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
புறநகர் மயிலாடுதுறை பகுதிக்கு 9445854043, மங்கநல்லூர் பகுதிக்கு 9445854040, கிளியனூர் பகுதிக்கு 9445854041, சங்கரன்பந்தல் பகுதிக்கு 9445854042, குத்தாலம் பகுதிக்கு 9445854046, கோமல் பகுதிக்கு 9445854038, கடலங்குடி பகுதிக்கு 9445854044 மற்றும் மேக்கிரிமங்கலம் பகுதிக்கு 9445854047 ஆகிய அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, மயிலாடுதுறை கோட்ட அலுவலகத்தின் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை எண்களான 04364-252218 மற்றும் 9498482319 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு மின் விபத்துத் தடுப்பு உதவிகளைப் பெறலாம் என செயற்பொறியாளர் ஷே.சாஹுல் ஹமீது தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















