ஆன்லைன் ஆப் மூலம் ரூ.54 ஆயிரம் முதலீடு... பல லட்சம் ஏமாந்த ஒரே கிராமத்தை சேர்ந்த மக்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு..!
ஆன்லைன் ஆப் மூலம் ரூ.1 கோடிக்கும் மேல் ஏமாந்த பொதுமக்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி மயிலாடுதுறை ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனுக்களை அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் அருகே உள்ள அப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆன்லைன் செயலி ஒன்றில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட விவகாரத்தில், தங்களது வாழ்வாதாரப் பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் திரண்டு வந்து மனு அளித்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த நவீன டிஜிட்டல் மோசடியில் சிக்கி, பெருந்தொகையை இழந்து தவித்து வருவது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசை வார்த்தை கூறி வலையில் வீழ்த்திய கும்பல்
மதுரை மாவட்டம் கட்டையம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் அருண் ஆகிய நபர்கள், ‘எஃப்.க்யூ.எல். எக்ஸ்சேஞ்’ (FQL Exchange) என்ற பெயரிலான செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச் செயலியில் பணம் செலுத்தி விளையாடினால் மிகக் குறுகிய காலத்தில் பல லட்சம் ரூபாயைச் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்துள்ளனர். குறிப்பாக, குறைந்தபட்ச முதலீடாக ரூ.54,000 செலுத்தினால் தினமும் குறிப்பிட்ட தொகை லாபமாகச் கணக்கில் சேரும் என்றும், அமெரிக்க டாலர் மதிப்பில் வருமானம் கிடைக்கும் என்றும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். இந்தத் திட்டத்தை கிராமப் புறங்களில் பரப்புவதற்காக இடைத்தரகர்களை நியமித்து, பொதுமக்கள் பலரையும் இந்த வலையில் வீழ்த்தியுள்ளனர்.
அப்பங்குளம் கிராமத்தில் அரங்கேறிய சங்கிலித் தொடர் மோசடி
அந்த வகையில், மயிலாடுதுறை அருகே உள்ள அப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏஜென்ட் பேபி என்பவருடனும், மதுரை கட்டையம்பட்டியைச் சேர்ந்த செல்வா மற்றும் அருண் ஆகியோருடனும் இணைந்து அப்பங்குளம் பொதுமக்கள் பலரை இந்தச் செயலியில் இணைய வைத்துள்ளனர். மேலும், இதில் இணைந்த ஒவ்வொரு நபரும் புதிதாக 5 நபர்களைச் சேர்த்தால் ஒரே வாரத்தில் ரூ.15,000 கூடுதல் ஊக்கத்தொகையாகக் கிடைக்கும் என்று மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அப்பங்குளம் கிராம மக்கள் தங்களது சேமிப்புப் பணம், நகை அடமானப் பணம் போன்றவற்றை முதலீடு செய்து, தலா ரூ.54,000 முதல் ரூ.1 லட்சம் வரை அந்தச் செயலியில் டெபாசிட் செய்தனர்.
போலி டாலர் குறுஞ்செய்திகளும் வெடித்த சர்ச்சையும்
பணம் செலுத்தியவர்களின் செல்போன்களுக்கு 500 அமெரிக்க டாலர் சேர்ந்திருப்பதாகவும், 3 சிக்னல்களுக்கு ரூ.4,500 மதிப்பிலான டாலர் லாபமாக வந்துள்ளதாகவும் போலி குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதை நம்பி பொதுமக்கள் மேலும் பலரை இதில் இணைத்துள்ளனர். இந்நிலையில்தான், எஃப்.க்யூ.எல். எக்ஸ்சேஞ் என்பது ஒரு போலியான நிறுவனம் என்றும், அதில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் விழிப்புணர்வு எச்சரிக்கைகள் பரவத் தொடங்கின.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தங்களை இணைத்த ஏஜென்ட் அப்பங்குளம் பேபியிடம் சென்று முறையிட்டனர். அதற்கு அவர், கட்டிய பணத்தில் பாதியைத் தருவதாகக் கூறியதால், பணம் செலுத்தியவர்களுக்கும் அவர்களைச் சேர்த்துவிட்ட இடைத்தரகர்களுக்கும் இடையே கடும் மோதலும் சச்சரவும் உருவானது.
காவல் நிலைய மனு மற்றும் ஏஜென்ட் கைது
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கடந்த மாதம் திரளாகச் சென்று மயிலாடுதுறை மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். தங்களை ஏமாற்றிப் பணத்தைப் பறித்த கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து, தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தப் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த முதன்மை ஏஜென்டான அப்பங்குளம் பேபியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கண்ணீர் கோரிக்கை
இருப்பினும், தங்களது முதன்மைத் தொகை இன்னும் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட மக்களில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்தைச் நேரில் சந்தித்த பொதுமக்கள், தாங்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்தப் பணம் மொத்தமாகப் பறிபோய்விட்டதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கண்ணீருடன் மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை மீட்பதற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Before You Go
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















