தீபாவளி ஷாப்பிங் பிளானா? மயிலாடுதுறையில் அசத்தல் சலுகைகளுடன் தொடங்கிய கோ-ஆப்டெக்ஸ் மேளா!
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிட்டப்பா அங்காடியில் இயங்கி வரும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
இச்சிறப்பு விற்பனைத் தொடக்க விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டிற்கான தீபாவளிச் சிறப்பு விற்பனையின் முதல் விற்பனையையும் ஆட்சியர் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.
பாரம்பரிய பெருமையும் நெசவாளர் வாழ்வாதாரமும்
தமிழ்நாடு அரசின் தலைமை கூட்டுறவு கைத்தறி நிறுவனமாக விளங்கும் “கோ-ஆப்டெக்ஸ்”, கடந்த 91 ஆண்டுகளாகத் தனது இணையற்ற சேவையைத் தாய்நாட்டிற்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் வாழும் பாரம்பரிய கைத்தறி நெசவாளர்கள் தங்கள் கைவண்ணத்தில் உற்பத்தி செய்யும் உயர்தரத் துணி இரகங்களை, இந்தியா முழுவதும் பரந்து விரிந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் இந்நிறுவனம் பெரும் பங்காற்றி வருகிறது.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையும், அவர்களின் உழைப்பிற்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதையும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது முதன்மை நோக்கமாகவும் சேவையாகவும் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்பு இரகங்கள்
மாறிவரும் நவீனக் காலத்திற்கு ஏற்பவும், வாடிக்கையாளர்களின் அழகியல் விருப்பங்களுக்கு ஏற்பவும் புதிய உத்திகளைக் கையாண்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆடை உற்பத்தியில் பல புதுமைகளைப் புகுத்தி வருகின்றது. இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகைக்காகக் காஞ்சிபுரம், ஆரணி மற்றும் திருபுவனம் போன்ற புகழ்பெற்ற நெசவு நகரங்களில் பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டுப் புடவைகள் மற்றும் பாரம்பரியப் பட்டுப்புடவைகள் பெருமளவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் கோவை கோரா காட்டன் சேலைகள், மயிலாடுதுறைக்கே உரித்தான புகழ்பெற்ற கூறைநாடு புடவைகள், மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்திச் சேலைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பண்டிகைக் கால சிறப்புப் பொருட்கள்
சேலைகள் மட்டுமன்றி, இல்லங்களுக்குத் தேவையான போர்வைகள், உயர்தரப் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள் ஆகியவையும் இச்சிறப்பு விற்பனையில் இடம் பெற்றுள்ளன. ஆண்களுக்கான வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்திச் சட்டைகள், பண்டிகைக் கால சிறப்பு மாப்பிள்ளை செட் மற்றும் பெண்களுக்கான நைட்டிஸ் போன்ற அனைத்து வயதினருக்குமான ஆடை இரகங்களும், ஏற்றுமதி தரத்திலான ஆடைகளும் ஏராளமான அளவில் வாடிக்கையாளர்களின் தேர்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
விற்பனை இலக்கு நிர்ணயம்
இந்த 2026-ஆம் ஆண்டு தீபாவளிச் சிறப்பு விற்பனையை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி மயிலாடுதுறை கிளை விற்பனை நிலையத்திற்கு ரூ.74.50 லட்சமும், சீர்காழி கிளை விற்பனை நிலையத்திற்கு ரூ.27.50 லட்சமும் என மொத்தம் ரூ.1.02 கோடி அளவிற்கு விற்பனை நிர்ணயிக்கப்பட்டுச் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர் சேமிப்புத் திட்டம் மற்றும் சலுகைகள்
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பொதுமக்களின் வசதிக்காக மாதாந்திர சிறுசேமிப்புத் திட்டத்தை மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.3,000 வரை 11 மாத தவணைகளாகச் செலுத்தலாம். நிறைவாக 12-வது மாத தவணைத் தொகையைக் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்வதுடன், கூடுதல் சேமிப்புப் பயனுடன் உயர்தரப் பருத்தி மற்றும் பட்டு இரகத் துணிகளை வாடிக்கையாளர்கள் வாங்கிப் பயனடையலாம். மேலும், இத்தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வசதியுடன், அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் கடன் விற்பனை வசதியும் தாராளமாக வழங்கி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஆட்சியரின் அழைப்பு
விழாவின் நிறைவாகப் பேசிய மாவட்ட ஆட்சியர், நமது பாரம்பரியக் கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், இரவும் பகலும் உழைக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் அளிக்கவும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும், பணியாளர்களும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஆடைகளை வாங்கி கைத்தறி நெசவாளர்களுக்குக் கைகொடுத்து உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் எஸ்.மாணிக்கம், துணை மண்டல மேலாளர் பிரேம்குமார், மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையப் பொறுப்பாளர்கள் மதன் மற்றும் கார்த்திகேயன், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் உட்பட அரசு அலுவலர்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Before You Go
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















