மதுரைக்கு இனி அலைய வேண்டாம்... விருதுநகருக்கு வந்தாச்சு தனி Aadhaar Seva Kendra !
விருதுநகர் மாவட்டத்தில் புதிய நவீன ஆதார் சேவை மையம் வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் புதிய நவீன ஆதார் சேவை மையத்தினை(Aadhaar Seva Kendra) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
புதிய நவீன ஆதார் சேவை மையம்
விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் (தேவகி ஸ்கேன் மையம் அருகில்) புதிய நவீன ஆதார் சேவை மையத்தினை(Aadhaar Seva Kendra) மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி அதன் செயல்பாட்டை பொதுமக்களின் சேவைக்காக தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது...," பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. அரசு நலத்திட்ட உதவிகள், கல்வி, வங்கிச் சேவைகள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் தொடர்பான விவரங்கள் சரியாகவும், புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் இருப்பது அவசியமாகும்.
புதிய ஆதார் சேவை மையம் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களது ஆதார் தொடர்பான சேவைகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெறும் வகையில் புதிய ஆதார் சேவை மையம் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஆதார் சேவை மையத்தில், பொதுமக்களுக்கு பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பித்தல், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மாற்றம், புகைப்படம், கைரேகை, கருவிழி ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் புதுப்பிப்பு, ஆதார் அட்டை பதிவிறக்கம் மற்றும் அச்சுப் பிரதியைப் பெறுதல், குழந்தைகளுக்கான ஆதார் பதிவு மற்றும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதார் சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே இடத்தில் உரிய வழிகாட்டுதலுடன் சேவை
மேலும், பொதுமக்கள் தங்களது ஆதார் தொடர்பான பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தைத் தவிர்த்து, ஒரே இடத்தில் உரிய வழிகாட்டுதலுடன் சேவைகளைப் பெறும் வகையில் இந்த சேவை மையம் செயல்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த புதிய நவீன ஆதார் சேவை மையத்தினைஅ பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான ஆதார் தொடர்பான சேவைகளைப் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, ஆதார் சேவை மைய மேலாளர் பூபதி ராஜா, பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அலைச்சலில் இருந்து விடுதலை
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ஆதார் சேவை மையத்திற்கு வந்த பயனடைந்து வந்தனர். இது அவர்களுக்கு மிகப்பெரும் சலிப்பை ஏற்படித்தியது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் புதிய நவீன ஆதார் சேவை மையம் வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















