"என் மேல இருக்க ஒரு குற்றச்சாட்டை நிரூபிச்சாலும் தூக்கு போட்டுக்குவேன்"...பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி பேச்சு..
பிரிஜ் பூஷன் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்கள் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
"குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கு போட்டு கொள்வேன்"
இந்த போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளில் ஏதேனும் ஒன்றை நிரூபித்தால் கூட தூக்கு போட்டு கொள்வேன் என பிரிஜ் பூஷன் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு சவால் விடுத்துள்ளார்.
பிரிஜ் பூஷன் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்கள் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால், இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக விசாரணை நடந்து வருவதாகவும் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தரப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தை, மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் இது தொடர்பாக செய்தி வெளியிட்டன.
"மல்யுத்த வீரர்கள் கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை"
"இதுவரை நடந்த விசாரணையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அவர்களின் (மல்யுத்த வீரர்கள்) கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அது குற்றப்பத்திரிகை அல்லது இறுதி அறிக்கையாக இருக்கலாம்" என காவல்துறை அதிகாரி தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், அந்த செய்திக்கு டெல்லி காவல்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. "மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கில் இறுதி அறிக்கையை போலீசார் தாக்கல் செய்த செய்தியை சில ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.
பல்டி அடித்த டெல்லி காவல்துறை:
இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே நீதிமன்றத்தில் முறையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என டெல்லி காவல்துறை விளக்கம் அளித்தது.
இச்சூழலில்தான், தன் மீதான குற்றச்சாட்டுகளில் ஏதேனும் ஒன்றை நிரூபித்தால் கூட தூக்கு போட்டு கொள்வேன் என பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார். "என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கிலிட்டு கொள்வேன். உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்" என பிரிஜ் பூஷன் தெரிவித்தார்.